கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், நாளை மற்றும் நாளை மறுநாள் வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், வயநாடு மாவட்டங்களுக்கும் நாளை இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார் மாவட்டங்களுக்கும் கன மழைக்கான ‘ ஆரஞ்ச் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
இன்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும், நாளை திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, காசர்கோடு மாவட்டங்களுக்கும், நாளை மறுநாள் (ஜூன் 29) இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார் மாவட்டங்களுக்கும் பலத்த மழைக்கான ‘ எல்லோ அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, பத்தினம்திட்டா, மலப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்வதால், பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்களும் விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. எர்ணாகுளத்தில் உள்ள மூவாட்டுப்புழா ஆறு, திருச்சூர் மற்றும் மலப்புரம் வழியாக பாயும் பாரதப்புழா ஆறு, பத்தனம்திட்டாவில் அச்சன்கோவில் மற்றும் பம்பா ஆறுகள், கோட்டயத்தில் மணிமாலா, இடுக்கியில் தொடுபுழா ஆறு மற்றும் வயநாட்டில் கபானி உள்ளிட்ட பல ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்கிறது.
மேலும் எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் இடுக்கி, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் நேற்று, அதி கனமழைக்கான, ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுத்தது. இதனால், நுாற்றுக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
Readmore: பாராசிட்டமால் Pomol-650 உட்பட 15 மருந்துகள் தரமற்றவை.. தடை செய்த அரசு..