சாதாரண AA பேட்டரிகளுக்கு மாற்றாக, USB Type-C மூலம் நேரடியாக சார்ஜ் செய்யக்கூடிய புதிய லித்தியம்-அயன் பேட்டரிகளை டோரேட்டோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. “பல்ஸ் AA USB-C Rechargeable Batteries” எனப்படும் இந்த பேட்டரிகள், அதிக பேக்கப், நீண்ட ஆயுள் மற்றும் எளிய சார்ஜிங் வசதி போன்ற அம்சங்களால் தற்போது கவனம் ஈர்த்துள்ளன.
ஒரு பேக்கில் இரண்டு AA பேட்டரிகள் வழங்கப்படுகின்றன. இந்த பேட்டரிகளின் முக்கிய சிறப்பு என்னவென்றால், இதில் தனியாக USB Type-C போர்ட் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால், தனி சார்ஜர் அல்லது சார்ஜிங் டாக் தேவையில்லை. எந்த 5V USB-C சார்ஜருடனும் நேரடியாக இணைத்து சார்ஜ் செய்யலாம். பயணங்களின்போதும் எளிதாக எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சாதாரண ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரிகள் பயன்படுத்தப்படும்போது மின்னழுத்தம் படிப்படியாக குறையும். ஆனால் டோரேட்டோ பல்ஸ் பேட்டரிகள் முழுமையாக டிஸ்சார்ஜ் ஆகும் வரை நிலையான 1.5V மின்னழுத்தத்தை வழங்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் ரிமோட், டிஜிட்டல் கேமரா, கேமிங் கன்ட்ரோலர், ஸ்மார்ட் லாக் மற்றும் மருத்துவ சாதனங்கள் போன்ற நுணுக்கமான மின்னணு கருவிகள் தடையின்றி செயல்பட உதவும்.
இந்த பேட்டரிகளில் 4255mWh கொள்ளளவு கொண்ட உயர் திறன் லித்தியம்-அயன் செல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 2.5A வரை டிஸ்சார்ஜ் மின்னோட்டத்தை ஆதரிப்பதால், அதிக மின்சாரம் தேவைப்படும் கருவிகளிலும் சிறப்பாக செயல்படும். குறிப்பாக ஃபிளாஷ் கேமரா, டிரிம்மர், மைக்ரோஃபோன், புளூடூத் கீபோர்டு, ரேஸர் உள்ளிட்ட சாதனங்களில் இதை பயன்படுத்தலாம்.
மேலும், இந்த பேட்டரிகளை 1000 முறைக்கும் அதிகமாக ரீசார்ஜ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி புதிய பேட்டரிகள் வாங்க வேண்டிய அவசியம் குறையும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தும் பேட்டரிகளுக்குப் பதிலாக, இது சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வாகவும் பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு அம்சங்களும் இதில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. கசிவு தடுப்பு சீல் மற்றும் பாதுகாப்பு பூச்சுடன் வழங்கப்படும் இந்த பேட்டரிகள், -20°C முதல் 60°C வரை வெப்பநிலையிலும் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு காலநிலைகளிலும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தயாரிப்புக்கு 6 மாத உத்தரவாதமும் வழங்கப்படுகிறது.
Read more: சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கில் இருந்து எப்போது பணம் எடுக்கலாம்..? முழு விவரம் இதோ..!



