“தானே விசாரிப்பதா? அல்லது வேறு நீதிபதிக்கு மாற்றுவதா” அமைச்சர் பொன்முடியின் சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு..!

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை, செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சொத்துக் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தானே விசாரிப்பதா? அல்லது வேறு நீதிபதிக்கு மாற்றுவதா என்பது குறித்து முடிவெடுப்பதற்காக, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 14ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளிவைத்துள்ளார்.

கடந்த 1996- 2001 வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக 1 கோடியே 36 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், வேலூர் நீதிமன்றத்திற்கு மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

இந்வழக்கில், 172 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 28ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்பில் பொன்முடி மற்றும் அவரை சார்ந்தோர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், அவரை விடுப்பதாக வேலூர் முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீட்டு மனு ஏதையும் தாக்கல் செய்யாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து பொன்முடி மீதான வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை அமைப்புகள் மிக மோசமான முறையில் விசாரணையை நடத்தி உள்ளதாகவும், இது தொடர்பாக பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை வரும் செப்டம்பர் 7ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, “விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றியது தொடர்பாக உயர்நீதிமன்ற நிர்வாக முடிவுகள் குறித்து உத்தரவில் கூறியுள்ளதால், வழக்கில் உயர்நீதிமன்ற பதிவுத்துறையை சேர்த்திருக்க வேண்டும் என்றார்.

மேலும், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்கும் முன் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பின் விளக்கத்தை கேட்கவில்லை என்றும், கடந்த ஜூன் மாதம் தான் வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், மேல் முறையீடு செய்ய அவகாசம் இருந்ததை கருத்தில் கொள்ளாமல், முன் முடிவெடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்கும் வழக்குகளை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்க வேண்டும் எனவும், எந்த நீதிபதி விசாரிப்பது என தலைமை நீதிபதி தான் முடிவெடுப்பார் என்பதால் விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.

பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவும், லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் முன் வைத்த வாதத்தையே வலியுறுத்தினார். மேலும் அவர், வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றிய உயர்நீதிமன்ற நிர்வாக முடிவுக்கும், தங்களுக்கும்
எந்த தொடர்பும் இல்லை என்றும், வழக்கு தொடர்பான ஆவணங்கள் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து எடுத்த வழக்கை தானே விசாரிப்பதா? அல்லது வேறு நீதிபதிக்கு மாற்றுவதா என்பது குறித்து அடுத்த வாரம் முடிவெடுப்பதாக கூறி, விசாரணையை செப்டம்பர் 14ம்
தேதிக்கு தள்ளிவைத்தார்.

Kathir

Next Post

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி..!! கச்சா எண்ணெய் விலை உயர்வு..!! பெட்ரோல், டீசல் விலையும் உயரும் அபாயம்..!!

Thu Sep 7 , 2023
இந்தியா தனது மொத்த எண்ணெய் தேவையில் 85% வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. ரஷ்யாவில் இருந்து தினமும் 3 லட்சம் பேரல்களும், சவுதி அரேபியாவில் இருந்து 10 லட்சம் பேரல்களும் இறக்குமதி செய்யப்படுகிறது. சவூதி அரேபியா உலக சந்தைக்கான விநியோகத்தை டிசம்பர் இறுதி வரை ஒரு நாளைக்கு 1 மில்லியன் பேரல்களாக குறைக்க முடிவு செய்துள்ளது. இதனால் கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய் விலை 6.5% உயர்ந்துள்ளது. இந்தாண்டு முதல் […]

You May Like