இந்தியாவின் நிதித்துறையில் அசைக்க முடியாத நம்பிக்கைக்குரிய அடையாளமாக திகழ்வது மத்திய அரசுக்கு சொந்தமான எல்ஐசி (LIC) நிறுவனம். பல தசாப்தங்களாக நடுத்தரக் குடும்பங்களின் சேமிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான “Safe Haven” ஆக விளங்கும் இந்த நிறுவனம், அண்மையில் சமூக வலைதளங்களில் ஒரு காரசாரமான விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. பியூஷ் டிரேட்ஸ் என்பவர் தனது உறவினரின் 20 ஆண்டு கால எல்ஐசி முதலீட்டு அனுபவத்தைப் பகிர்ந்துள்ள பதிவு, முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
அவரது பதிவின்படி, 2006-ஆம் ஆண்டு முதல் மாதம் ரூ.462 வீதம் 20 ஆண்டுகளாக எல்ஐசியில் முதலீடு செய்த ஒருவருக்கு, முதிர்வுத் தொகையாக வெறும் ரூ.1.5 லட்சம் மட்டுமே கிடைக்க உள்ளது. இதனைப் பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவு என்று சாடியுள்ள அவர், இதே தொகையை வங்கியில் நிலையான வைப்பு நிதியாக (FD) வைத்திருந்தால் ரூ.2.41 லட்சமும், 12% வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்திருந்தால் ரூ.4.75 லட்சமும் கிடைத்திருக்கும் என ஆதங்கத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த ஒப்பீடு, எல்ஐசி போன்ற காப்பீட்டுத் திட்டங்களின் சாதக மற்றும் பாதகங்களை மீண்டும் அலச வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில், எல்ஐசி போன்ற பாரம்பரியக் காப்பீட்டுத் திட்டங்களில் நாம் செலுத்தும் பிரீமியம் தொகையானது 3 கூறுகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒரு பகுதி பாலிசிதாரரின் உயிருக்குக் காப்பீடு வழங்குவதற்காகவும் (Risk Cover), மற்றொரு பகுதி முகவர் கமிஷன் மற்றும் நிர்வாக செலவுகளுக்காகவும் ஒதுக்கப்படுகிறது. எஞ்சியிருக்கும் சிறு பகுதி மட்டுமே பாதுகாப்பான அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுவதால், இதில் கிடைக்கும் போனஸ் விகிதம் பொதுவாக 3% முதல் 5% வரை மட்டுமே இருக்கும். இதனால், பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைப் போன்ற அதிகப்படியான லாபத்தை இதில் எதிர்பார்க்க முடியாது.
இருப்பினும், எல்ஐசியின் பக்கம் உள்ள மிகப்பெரிய பலம் ‘பாதுகாப்பு’ மற்றும் ‘வரிச் சலுகை’. பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்கள் அல்லது வங்கிச் செயல்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டாலும், எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு இந்திய அரசின் இறையாண்மை உத்தரவாதம் உண்டு. மேலும், 80C மற்றும் 10(10D) பிரிவுகளின் கீழ் வரிச் சலுகைகள் கிடைப்பது கூடுதல் பலம். எல்லாவற்றிற்கும் மேலாக, முதலீட்டு காலத்தில் பாலிசிதாரருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால், அவர் கட்டிய தொகையை விட பல மடங்கு அதிகமான ‘டெத் பெனிபிட்’ (Death Benefit) அவரது குடும்பத்திற்கு உடனடியாக கிடைக்கும். இது மியூச்சுவல் ஃபண்டில் சாத்தியமில்லாத ஒரு பாதுகாப்பு அம்சமாகும்.
நிதி ஆலோசகர்களின் கருத்துப்படி, காப்பீட்டையும் முதலீட்டையும் எப்போதும் தனித்தனியாக பார்ப்பதே சிறந்தது. குறைந்த பிரீமியத்தில் அதிக ஆயுள் பாதுகாப்பு வழங்கும் ‘டெர்ம் இன்சூரன்ஸ்’ (Term Insurance) எடுத்துக் கொண்டு, மீதமுள்ள தொகையை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அதிக லாபத்தைத் தரும். “எனது பணம் பாதுகாப்பாகக் கிடைத்தால் போதும், எந்த ரிஸ்க்கும் வேண்டாம்” என நினைப்பவர்களுக்கு எல்ஐசி இப்போதும் ஒரு சிறந்த தேர்வாகும். மாறாக, அதிக லாபத்தை இலக்காக கொண்டவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் பக்கம் கவனம் செலுத்தலாம். மொத்தத்தில், உங்கள் நிதி இலக்கையும் ரிஸ்க் எடுக்கும் திறனையும் பொறுத்தே எல்ஐசி லாபமா அல்லது நஷ்டமா என்பது அமையும்.



