திருமண உறவில் ஏற்படும் பிரச்சனையின் போது கூறப்படும் உணர்வுப்பூர்வமான குற்றச்சாட்டு அவதூறாகுமா? இதுகுறித்து மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது..
விவாகரத்து மற்றும் பராமரிப்பு வழக்குகளில் தன்னை ஆண்மையற்றவள் என்று கூறி தனது நற்பெயரை கெடுத்ததாக கணவர் ஒருவர் குற்றம்சாட்டி உள்ளார்.. இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கில் தீர்ப்பு வழங்கினார்.. ஆண்மைக்குறைவு குற்றச்சாட்டு, விவாகரத்து அல்லது பராமரிப்பு நடவடிக்கைகளின் பின்னணியில் செய்யப்பட்டால், அதை அவதூறாகக் கருத முடியாது என்று அவர் தீர்ப்பளித்தார்.
நீதிபதி எஸ்.எம். மோடக் தலைமையிலான ஒற்றை நீதிபதி அமர்வு, அந்த ஆணின் குற்றவியல் அவதூறு புகாரை தள்ளுபடி செய்தது.. மேலும், அத்தகைய கூற்றுக்கள் – எவ்வளவு உணர்திறன் வாய்ந்ததாக இருந்தாலும், இந்து திருமணச் சட்டத்தின் கீழ் விவாகரத்துக்கான காரணங்களுடன் உள்ளார்ந்த முறையில் பிணைக்கப்பட்டுள்ளன என்று தீர்ப்பளித்தது
“ஒரு திருமண உறவில் வாழ்க்கைத் துணைகளுக்கு இடையே வழக்குகள் எழும்போது, மனைவி தனது நலனுக்காக அந்தக் குற்றச்சாட்டுகளைச் செய்வது நியாயமானது என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது,” என்று தனது உத்தரவில் நீதிபதி கூறினார். சட்டப்பூர்வ வழக்குகளில் கூறப்படும் இந்தக் கூற்றுகள் அவதூறானவை அல்ல என்பதை அவர் வலியுறுத்தினார்.
வழக்கின் பின்னணி என்ன?
விவாகரத்து மற்றும் பராமரிப்பு மனுக்களில் மட்டுமல்லாமல், காவல்துறை அளித்த புகாரிலும் தனது மனைவி தன்னை ஆண்மையற்றவர் என்று குறிப்பிட்டதை அடுத்து, மனுதாரர் தனது மனைவி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக ஒரு குற்றவியல் வழக்கைத் தொடங்கினார். மனைவியின் இந்த கருத்துகள், தனது சமூக பிம்பத்தை சரிசெய்ய முடியாத அளவுக்கு சேதப்படுத்தியுள்ளன என்று அவர் வாதிட்டார்.
இருப்பினும், மனைவியின் கருத்து அவரது கொடுமை பற்றிய கூற்றுக்களை உறுதிப்படுத்தவும், விவாகரத்துக்கான அவரது மனுவை நியாயப்படுத்தவும் மட்டுமே செய்யப்பட்டன என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இந்தக் கருத்துக்கள் சட்ட நடவடிக்கைகளின் கட்டமைப்பிற்குள் மட்டுமே இருந்ததால், அவற்றை அவதூறாகக் கருத முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சுவாரஸ்யமாக, இந்தத் தீர்ப்பு மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையின் 2018 ஆம் ஆண்டு தீர்ப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. அப்போது, நீதிபதி சுனில் ஷுக்ரே, குறிப்பாக சட்ட சூழலுக்கு வெளியே ஒருவரை “ஆண்மையற்றவர்” என்று அழைப்பது அவதூறுக்கு சமம் என்று தீர்ப்பளித்திருந்தார். இந்த வார்த்தை ஒரு ஆணின் ஆண்மையை நேரடியாகத் தாக்குகிறது மற்றும் ஏளனம் அல்லது சமூக புறக்கணிப்பைத் தூண்டக்கூடும் என்றும், இதனால் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவுகள் 499 (அவதூறு) மற்றும் 500 (அவதூறுக்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.