தவெகவின் கொள்கை தலைவர்களாக 5 தலைவர்களை விஜய் அறிவித்திருந்தார்.. வேலு நாச்சியார், காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் ஆகியோர் தவெகவின் கொள்கை தலைவர்கள்.. தவெகவின் வழிகாட்டு தலைவர்கள் என அண்ணா, எம்.ஜி.ஆர் என்றும் பின்னர் தெரிவிக்கப்பட்டது..
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த வார விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.. செங்கோட்டையனுக்கு தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.. ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்..
இந்த நிலையில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஜெயலலிதா புகைப்படத்துடன் கார்த்திகை தீப திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. அதில் “ தீமையின் இருள் நீங்கி, உங்கள் வாழ்வில் நன்மையின் ஒளி வீசட்டும்.. அனைவருக்கும் கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்..” என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அந்த போஸ்டரில் செங்கோட்டையன் – விஜய் புகைப்படங்களுடன் தவெகவின் 5 கொள்கை தலைவர்களின் படங்களும் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளன.. மேலும் தவெகவின் வழிகாட்டு தலைவர்களாக கூறப்பட்ட அண்ணா, எம்.ஜி.ஆர் படங்களும் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளன.. வழிகாட்டு தலைவர்களுக்கு அருகே ஜெயலலிதாவின் படத்தையும் செங்கோட்டையன் இணைத்துள்ளார்.. எனவே தவெகவின் வழிகாட்டு தலைவர் ஜெயலலிதாவா? என்ற கேள்வி எழுந்துள்ளது..
தவெகவில் இணைந்த போதும் சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதா படத்தை செங்கோட்டையன் வைத்திருந்தார்.. அதே போல் கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள அவரின் அலுவலக பேனரிலும் ஜெயலலிதா புகைப்படம் இடம்பெற்றுள்ளது.. தவெகவில் இணைந்ததும் ஜெயலலிதா நினைவிடத்திலும் செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார். இதன்மூலம் ஜெயலலிதாவை தவெகவின் வழிகாட்டு தலைவராக செங்கோட்டையன் முன்னிறுத்த முயல்கிறாரா? இதற்கு தவெக தலைமை எப்படி எதிர்வினையாற்றப் போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது..
Read More : கொஞ்ச மழைக்கே, இவ்வளவு தண்ணீர்.. வடிகால் வசதிகள் செய்யப்படாததே காரணம்.. தமிழக அரசை சாடிய விஜய் !



