தமிழ்நாட்டில் இன்னும் 5 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே அனல் பறக்க தொடங்கியுள்ளது. ஆளும் திமுக ஒருபுறம் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தி, மற்ற கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் இழுப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.
மறுபுறம், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக எப்படியும் இந்த முறை ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற இலக்குடன் வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த இரண்டு பெரிய கட்சிகளின் போட்டிகளுக்கு நடுவே, நடிகர் விஜய்யும் அரசியல் களத்தில் இருப்பதால், 2026 தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது. இந்த பரபரப்பான சூழலில், கடந்த சில நாட்களாகவே பிற கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தொடர்ந்து திமுகவில் இணைந்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது அதிமுக முன்னாள் MLA சின்னசாமி, முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். சிங்காநல்லூர் தொகுதியில் 2006 மற்றும் 2011 ஆம் வருடம் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட்டு MLA-வான இவர், அண்ணா தொழிற்சங்க செயலாளராகவும் இருந்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் கோவையில் அமோக வெற்றியை குறிவைத்து அதிமுகவின் முக்கிய தலைவர்களை, திமுக தங்கள் வசம் இழுத்து வருகிறது. இதனால், எடப்பாடி தரப்பினர் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் முக்கிய பிரமுகர்களான அன்வர் ராஜா, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
Read more: தவெகவின் வழிகாட்டு தலைவரா ஜெயலலிதா? செங்கோட்டையன் வாழ்த்து செய்தியால் சர்ச்சை!



