ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தொடர் விடுமுறை கிடைத்த உற்சாகத்தில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்தனர். இதற்கிடையில், வார இறுதி விடுமுறையான அக்டோபர் 4 (சனி) மற்றும் 5 (ஞாயிறு) ஆகியவற்றுக்கு நடுவில் வரும் ஒரே வேலை நாளான அக்டோபர் 3 (வெள்ளிக்கிழமை) அன்றும் அரசு விடுமுறை என்று சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வேகமாக பரவியது.
இதனால், 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், இந்த தகவல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லாததால் மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவியது. இந்நிலையில், வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழ்நாடு அரசின் உண்மைச் சரிபார்ப்பு பிரிவான TN Fact Check விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், “அக்டோபர் 3-ஆம் தேதி அரசுப் பொது விடுமுறை அல்ல.. அன்று அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எனவே, சமூக வலைதளங்களில் பரவும் உறுதிப்படுத்தப்படாத இத்தகைய தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், விடுமுறை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு தமிழக அரசின் செய்தி குறிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More : ஐபிஎல் வரலாற்றில் மாபெரும் சாதனை..!! ரூ.17,762 கோடிக்கு RCB அணி விற்பனை..!! வாங்கியது யார் தெரியுமா..?