தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் நாளுக்கு நாள் விறுவிறுப்படைந்து வருகின்றன. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை ஏற்று, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) டி.டி.வி. தினகரன் இணைந்தது ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்பட்டது. இந்த இணைப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “சசிகலாவும் எங்களது கூட்டணிக்குத் தனது ஆதரவை வழங்குவார்” என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டார். தினகரனின் இந்த கருத்து, அதிமுகவில் மீண்டும் சசிகலாவுக்கு இடம் கிடைக்குமா அல்லது மறைமுகமாக அவர் கூட்டணிக்குள் கொண்டுவரப்படுவாரா என்ற விவாதத்தை அரசியல் வட்டாரத்தில் கிளப்பியது.
தினகரனின் இந்த அறிவிப்பால், அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. சசிகலா விவகாரத்தில் இபிஎஸ் தனது பிடிவாதமான நிலைப்பாட்டை தளர்த்துவாரோ என்ற யூகங்களும் சமூக வலைதளங்களில் பரவின. இந்நிலையில், இந்த அனைத்துக் கேள்விகளுக்கும், ஊகங்களுக்கும் எடப்பாடி பழனிசாமி தனது பாணியில் ஒரு முற்றுப்புள்ளியை வைத்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், சசிகலாவின் ஆதரவு மற்றும் அவர் கட்சிக்குள் வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “அதிமுக என்ற மாபெரும் இயக்கத்திற்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ, அவர்களெல்லாம் கட்சியிலிருந்து துரத்தி அடிக்கப்பட்டவர்கள். கட்சியை சிதைக்க நினைத்தவர்களுக்கு இங்கே இடமில்லை. எனவே, சசிகலா குறித்துப் பேச வேண்டிய அவசியம் எங்களுக்குக் கிடையாது” என்று மிகவும் காட்டமாக தெரிவித்தார்.



