ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், பிஜு மேனன், வித்யூத் ஜாம்வால் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘மதராஸி’ படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக பல வெற்றிப்படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் 2018-இல் விஜய் நடிப்பில் சர்க்கார் திரைப்படத்தை இயக்கினார். அதன்பிறகு, 2020-ல் வெளியான தர்பார் தோல்வியடைந்தது. அதன்பின் முருகதாஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கிய சிக்கந்தர் (ஹிந்தி) படுதோல்வியடைந்தது. இந்நிலையில், சிவகார்த்திக்கேயனை வைத்து மதராஸி படத்தை இயக்கியுள்ளார்.
சமூக பேரழிவுகளை தொடர்ந்து படங்களில் முன்னிறுத்தி வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இந்த முறை துப்பாக்கி கலாசாரத்தை கையில் எடுத்துள்ளார். தமிழகத்தில் ஊடுருவும் துப்பாக்கி கலாசாரத்தை வேரறுக்கும் கதை தான் இது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை மதராஸி படம் பூர்த்தி செய்துள்ளதாக என்பது குறித்து படம் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு பயனர் படம் ஆக்ஷன் த்ரில்லராக துவங்கி, பரபர திரைக்கதையை அமைத்திருக்கிறார் என்றும் படத்தின் இன்டெர்வெல் பிளாக் வெறித்தனமாக இருக்கிறது. படத்தில் காதல், அதிரடி சண்டை, வில்லன் வித்யுத் ஜம்வால் என்ட்ரி என அனைத்தும் ரசிக்கும் படி உள்ளது.
அனிருத்தின் இசை படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது. மதராஸி திரைப்படம் ஏ.ஆர்.முருகதாஸின் கம்பேக் படம் என பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், படத்தின் முதல் பாதி காதல், காமெடி, ஆக்சன் என நகர்வதாகவும் இரண்டாம் பாதிக்குப் பின் படம் உச்சகட்டத்தை அடைவதாகவும், குறிப்பாக படத்தின் இன்டெர்வெல் பிளாக் மற்றும் கிளைமேக்ஸை மிஸ் செய்ய வேண்டாம் எனவும் கூறியிருக்கின்றனர்.
மேலும் சிலர், அதிரடியான சண்டை காட்சிகளை விரும்புபவர்களுக்கு இந்த படம் ஒரு விருந்தாக இருக்கும். உணர்ச்சிபூர்வமான படமாக இருக்கிறது. படத்தில் சில லாஜிக் தவறுகள் உள்ளன. இருந்தாலும், இந்த ஆண்டின் ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் இருக்கும் என பதிவிட்டுள்ளார்.
படத்தின் முதல் காட்சி முடிந்த பின்னர் ரசிகர்கள் கொடுத்துள்ள வரவேற்பு படக் குழுவை மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டு இருப்பதால், டிக்கெட் புக்கிங்கும் அதிகரித்து பாக்ஸ் ஆபீசில் சாதனை படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.