இன்றைய காலகட்டத்தில் பாக்டீரியா மற்றும் வைரஸ்களிலிருந்து தற்காத்துக்கொள்ள பெரும்பாலானோர் கை சுத்திகரிப்பான்களை (Hand Sanitizers) வழக்கமாக பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆல்கஹால் (Alcohol) உள்ள சுத்திகரிப்பான்கள் மிகச் சிறந்தவை என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் தற்போது, அவற்றில் பயன்படுத்தப்படும் முக்கிய பொருளான ‘எத்தனால்’ (Ethanol) புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என ஐரோப்பிய ஒன்றியம் (European Union) அதிர்ச்சிகரமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
எத்தனால் தடை செய்யப்படுமா? ஐரோப்பிய வேதியியல் நிறுவனம் (European Chemicals Agency – ECHA) சார்ந்த உயிரிக்கொல்லி தயாரிப்புகள் குழு (Biocidal Products Committee) எத்தனாலின் பாதுகாப்பு குறித்து பரிசீலித்து வருகிறது. அடுத்த மாதம் நடைபெறும் கூட்டத்தில் எத்தனால் உண்மையில் புற்றுநோயை உண்டாக்கும் என்று தீர்மானிக்கப்பட்டால், அதை கை சுத்திகரிப்பான்கள் உள்ளிட்ட பல தயாரிப்புகளில் தடை செய்யும் வாய்ப்பு உள்ளது. இறுதி முடிவு ஐரோப்பிய ஆணையத்தால் (European Commission) எடுக்கப்படும் என பைனான்ஷியல் டைம்ஸ் (Financial Times) செய்தி தெரிவித்துள்ளது.
எத்தனால் எப்படி ஆபத்தானது..? நிபுணர்கள் கூறுவதாவது, எத்தனால் உடலில் அசிடால்டிஹைட் (Acetaldehyde) எனப்படும் நச்சு இரசாயனத்தை உருவாக்குகிறது. இது நேரடியாக டிஎன்ஏவை (DNA) சேதப்படுத்தி, புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
புற்றுநோய் ஆராய்ச்சி யுகே (Cancer Research UK) தெரிவித்துள்ளது: உடல் அசிடால்டிஹைடை விரைவாக உடைக்க முடியாவிட்டால், அது மெதுவாக தேங்கி, டிஎன்ஏ சேதத்துக்கு வழிவகுக்கிறது. இதனால் வாய், தொண்டை, உணவுக்குழாய், குடல், கல்லீரல், மார்பகம், வயிறு, கணையம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது. மேலும் எத்தனால் கர்ப்பிணி பெண்களில் கர்ப்ப சிக்கல்களை (Pregnancy Complications) உருவாக்கும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
உலக சுகாதார அமைப்பு (WHO) இதுவரை எத்தனாலை பாதுகாப்பானதாகவே வகைப்படுத்தியுள்ளது. WHO தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது எத்தனால் அடிப்படையிலான கை சுத்திகரிப்பான்கள் பெரும்பாலும் பாதுகாப்பானவை. ஆனால் அவற்றை அதிக அளவில் பயன்படுத்தினால் சரும எரிச்சல், தலைவலி, குமட்டல் போன்ற சிறிய பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
எத்தனால் எந்த பொருட்களில் உள்ளது? கை சுத்திகரிப்பான்களுடன், வாய் கழுவும் திரவங்கள் (Mouthwash), உடல் கழுவும் திரவங்கள், ஹேர்ஸ்ப்ரே (Hairspray), ஆப்டர்ஷேவ் (Aftershave) மற்றும் மருத்துவப் பொருட்களிலும் எத்தனால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
நிபுணர்கள் பரிந்துரைக்கும் பாதுகாப்பு வழிமுறைகள்:
* முடிந்தவரை சோப்பு மற்றும் தண்ணீர் பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும்.
* கை சுத்திகரிப்பான்களை பயன்படுத்த வேண்டிய சூழலில், அவை மெத்தனால் (Methanol) அல்லது பென்சீன் (Benzene) போன்ற நச்சுப் பொருட்களைக் கொண்டிருக்காததை உறுதி செய்ய வேண்டும்.
* அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்புகளை மட்டுமே பயன்படுத்தவும்.
* ட்ரைக்ளோசன் (Triclosan) மற்றும் மெத்தனால் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்ட சானிடைசர்களை தவிர்க்கவும்.
* குழந்தைகளிடம் இருந்து சானிடைசர்களை விலக்கி வைக்கவும், ஏனெனில் தவறுதலாக உட்கொள்வது ஆல்கஹால் விஷத்துக்கு வழிவகுக்கும்.
Read more: FLASH | கனமழை எதிரொலியால் மேலும் 2 மாவட்டங்களுக்கு விடுமுறை..!! முழு லிஸ்ட் இதோ..!!



