நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. முதல் தேர்தலிலேயே வலுவான முத்திரை பதிக்க கட்சி தீவிரமாகத் தயாராகி வருகிறது. இரண்டு பெரிய மாநாடுகளை நடத்தி முடித்த நிலையில், விஜய் விரைவில் சுற்றுப்பயணத்தையும் தொடங்க உள்ளார்.
தவெக செயற்குழுவில், திமுக அல்லது பாஜகவுடன் எந்த கூட்டணியும் இருக்காது என விஜய் அறிவித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதனால், திமுக எதிர்ப்பு வாக்குகள் தவெக பக்கம் திரும்பும் வாய்ப்பு அதிகம் என நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும், விஜய் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துவிட்டதால், அதிமுகவுடனான கூட்டணிக்கும் வாய்ப்பே இல்லை.
விஜய் ரசிகர் மன்றம் 2022 உள்ளாட்சி தேர்தலில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டது. அதனால், தவெகவும் அதே சின்னத்தில் போட்டியிட விரும்பியது. ஆனால், அந்த சின்னம் ஏற்கனவே கேரள காங்கிரஸ் (ம) கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், தவெக அதைப் பெற முடியாது என தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
தற்போது தேர்தல் ஆணையம் வெளியிட்ட 184 ஒதுக்கப்படாத சின்னங்களில், 182வது சின்னமாக ‘விசில்’ உள்ளது. விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் விசில் சின்னம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்ததால், அதையே தவெக கேட்டு பெறும் வாய்ப்பு அதிகம். கட்சித் தரப்பில் இது மக்களிடம் எளிதாகப் பரவக் கூடிய சின்னம் என கருதப்படுகிறது.
ஒருவேளை விசில் சின்னம் கிடைக்காவிட்டால், தென்னை மர தோப்பு, லேப்டாப், டெலிவிஷன், பேட், நட்சத்திரம், அகல் விளக்கு போன்றவை விருப்ப சின்னங்களாக தவெக சமர்ப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், வரவிருக்கும் 2026 தேர்தலில் விஜய்யின் தவெக எந்த சின்னத்தில் மக்களிடம் களமிறங்கும்? என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.