இந்திய மற்றும் சீன நாட்டின் இடையிலான எல்லைப் பிரச்னை மற்றும் இருநாட்டு ராணுவத்தின் தாக்குதல் காரணமாக சுமார் 250-க்கும் மேற்பட்ட சீன செயலிகள் தடைசெய்யப்பட்டன. அதில் ஒன்று டிக்டாக். தனி மனிதன் சுதந்திரத்தின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தும் களமாக டிக் டாக் செயலி உலக அளவில் உலா வந்தது. குறிப்பாக, அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது என்றால் மிகையில்லை. அதாவது, சின்னச் சின்ன வீடியோக்களை பதிவு செய்யும் டிக் டாக் செயலி இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பிரபலமாக இருந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் 2020ம் ஆண்டு ஜூலை மாதம் தடை செய்யப்பட்டது. டிக்டாக் செயலிக்குப் பதிலாக பல மாற்று செயலிகள் இந்தியாவில் தோன்றினாலும் டிக்டாக் அளவுக்கு இன்னும் எந்த செயலியும் பிரபலமாகவில்லை.
இந்த நிலையில் டிக்டாக் செயலி மீண்டும் இந்தியாவுக்குள் வர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா மட்டுமன்றி பல நாடுகளில் டிக்டாக் தடை செய்யப்பட்டாலும் தற்போது மீண்டும் ஒரு சில நாடுகளில் டிக்டாக் நுழைந்துவிட்டது. அதேபோல் இந்தியாவிலும் நுழைய பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டபோதிலும் ஒன்றிய அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் இந்தியாவில் தனது சேவைகளைத் தொடங்க டிக்டாக் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
தற்போதைய சூழ்நிலையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் மேம்பட்டு வருகிறது. இந்த வார தொடக்கத்தில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இந்தியாவுக்கு வருகை புரிந்தார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்புகளின் போது, இருதரப்பு உறவுகளுக்கு “தெளிவான மற்றும் ஆக்கபூர்வமான” அணுகுமுறை தேவை என்று ஜெய்சங்கர் எடுத்துரைத்தார். இந்த வேகத்தை அதிகரிக்கும் வகையில், இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள எஸ்சிஓ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சீனாவுக்குச் செல்லவுள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சுமூகமாக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. இது டிக் டாக் போன்ற சீன செயலிகள் இந்திய சந்தையில் மீண்டும் நுழைவதற்கான கதவுகளைத் திறக்கும்.
டிக்டாக் வெப்சைட் இந்தியாவில் இன்னும் ஆக்டிவாக இருப்பதாகவும், பலரால் அதை ஆக்சஸ் செய்ய முடிவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், டிக்டாக் செயலி அவைலபிளாக இல்லை. டிக் டாக் இணையதளம் நேரலையில் இருப்பது ஊகங்களைத் தூண்டினாலும், அதன் வருகை குறித்து இந்திய அரசாங்கத்திடமிருந்தோ அல்லது நிறுவனத்திடமிருந்தோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. தடை நீக்கப்படவில்லை, மேலும் ஒழுங்குமுறை ஒப்புதல் இல்லாமல், டிக் டாக் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் செயல்பட முடியாது.