நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா 10 ஆயிரத்து 245 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தார். இவரின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி வாக்காளர் காந்திமதிநாதன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கிற்கு பதில் அளிக்க இசக்கி சுப்பையாவுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. தனக்கு எதிரான தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று இசக்கி சுப்பையா பதில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வாக்காளர் காந்திமதிநாதன் தாக்கல் செய்த தேர்தல் மனுவை நிராகரிக்க முடியாது. அவரின் வழக்கை நிராகரிக்க கோரி இசக்கி சுப்பையா தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தேர்தல் வழக்கு தொடர்பான மனுவில் சில பத்திகளை நீக்க வேண்டும் என்று இசக்கி சுப்பையா கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்ற நீதிபதி, தொகுதியில் 2ம் இடம் பிடித்த காங்கிரஸ் வேட்பாளர் வி.பி.துரையை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நீக்கினார். சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 2வது இடத்தை பிடித்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றால், தொகுதியில் இரு வேட்பாளர் மட்டுமே போட்டியிட்டிருக்க வேண்டும். அம்பாசமுத்திரம் தொகுதியில் இரண்டுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளதால், 2ஆம் இடம் பிடித்தவரை வெற்றி பெற்றவராக அறிவிக்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.


