மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தின் பின்னணியில், வெளிநாட்டு கொடிகள் ஏந்திய கப்பல்களில் பணியாற்றிய குறைந்தது மூன்று இந்திய கடற்பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்; மேலும் ஒருவர் கடுமையாக காயமடைந்துள்ளார் என்று இந்தியாவின் கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்தது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்து, முக்கிய வர்த்தக கடற்பாதைகள் பாதிக்கப்படக் கூடிய சூழலில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்தப் பகுதியில் இந்திய கடற்பணியாளர்கள் தொடர்பாக 4 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 3 பேர் உயிரிழந்தும், ஒருவர் காயமடைந்தும் உள்ளனர். இவர்கள் அனைவரும் வெளிநாட்டு கொடி கொண்ட கப்பல்களில் பணியாற்றியவர்கள் என்று கப்பல் போக்குவரத்து துறை தெரிவித்தது.
ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானில் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக, ஈரான் மற்றும் அதன் கூட்டாளிகள் இஸ்ரேல், அண்டை வளைகுடா நாடுகள் மற்றும் உலகளாவிய எண்ணெய்–எரிவாயு விநியோகத்திற்கு முக்கியமான ஆற்றல் கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கப்பல் போக்குவரத்து துறை எச்சரிக்கை
இந்த நிலைமையால், ஹார்முஸ் நீரிணை மற்றும் ஓமன் வளைகுடா போன்ற முக்கிய கடற்பாதைகள் கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, கப்பல் இயக்குநர்கள் பயணத்திற்கேற்ப அபாய மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கப்பல் போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது 200-க்கும் மேற்பட்ட கப்பல்கள் அதிக ஆபத்து உள்ள பகுதிகளைத் தவிர்க்க நங்கூரமிட்டு நிற்கவோ அல்லது வழிமாற்றம் செய்யவோ தொடங்கியுள்ளன.
ஆலோசனையில், பாரசீக வளைகுடா, ஹார்முஸ் நீரிணை, ஓமான் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் உருவாகி வரும் கடற்பாதுகாப்பு சூழலை நெருக்கமாக கண்காணித்து வருவதாக கப்பல் போக்குவரத்து துறை தெரிவித்தது. ஏவுகணை மற்றும் ட்ரோன் நடவடிக்கைகள், மின்னணு இடையூறுகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும் கூறப்பட்டது.
கப்பல் இயக்குநர்களுக்கு அறிவுறுத்தல்
இந்தப் பகுதிகளில் இயங்கும் கப்பல்கள் உயர்ந்த பாதுகாப்பு நிலையை கடைப்பிடிக்க வேண்டும்; பாலம் கண்காணிப்பை (bridge watch) அதிகரிக்க வேண்டும்; தொடர்ச்சியான தொடர்பு தயார்நிலையை உறுதி செய்ய வேண்டும்; சந்தேகத்திற்கிடமான எந்தச் செயல்பாடையும் உடனடியாக அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக ஆபத்து உள்ள பகுதிகளைக் கடக்கும் முடிவுகளை, நிலவும் சூழ்நிலையைப் பொருத்து இயக்குநர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மற்ற இந்திய பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
மீதமுள்ள இந்திய கடற்பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும், அவர்களின் நலன் மற்றும் தேவையான உதவிகளை உறுதி செய்ய அனைத்து சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் கப்பல் போக்குவரத்து துறை தெரிவித்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், இந்திய கொடி ஏந்திய கப்பல்களை 24×7 கண்காணிப்பு, அதிகரிக்கப்பட்ட அறிக்கை அளிப்பு, மற்றும் நேரடி தடமறிதல் ஆகியவற்றுடன் பாதுகாப்பு மேற்பார்வை வலுப்படுத்தப்பட்டுள்ளதாக துறை கூறியது. இந்திய கடற்படை, வெளியுறவு அமைச்சம் இந்திய தூதரகங்களுடன் நெருங்கிய ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திய கடற்பணியாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் உடனடி உதவி மற்றும் ஆதரவை வழங்க, ஒரு தனி ‘விரைவு நடவடிக்கை குழு’ அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவசர நிலைகளில் உடனடி நடவடிக்கை எடுக்க இது உதவும் என்றும் கப்பல் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.



