கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. தொழில்நுட்ப முன்னேற்றம் எனும் பெயரில் இந்நிறுவனங்கள் வளர்ந்தாலும், அதே சமயம் அவற்றின் உள்ளக நிர்வாகங்களில் மனித நேயமற்ற நடைமுறைகள் அதிகரித்து வருகின்றன.
சமீபத்தில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றிய ஒருவர் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் இதற்குச் சான்று. “அனுமதி இல்லாமல் விடுமுறை எடுத்தது” என்ற காரணத்தைச் சொல்லி அவரை வெளியேற்றியுள்ளனர். ஆனால் அந்த ஊழியர் முன்பே மேலாளர் மற்றும் சிஇஓவிடம் அனுமதி பெற்று தான் விடுமுறை எடுத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.
ரெடிட் தளத்தில் தனது வேதனையைப் பகிர்ந்த அந்த ஊழியர் கூறியதாவது, “நான்கு மாதங்களாக இடைவிடாமல் கடுமையாக உழைத்தேன், நீண்ட நேரம் வேலை செய்ய நேரிட்டது. ஆனால் இன்று ஒரு மின்னஞ்சல் மூலமே என் வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டார்கள். இதனால் மிகவும் சோர்வடைந்துள்ளேன். எனக்கு ஏதாவது நிவாரணம் தருவார்களா? பணி அனுபவ சான்று தருவார்களா? சம்பள ஸ்லிப் தருவார்களா? என்பது தெரியவில்லை.
இதனால் நான் அதிக வலியுடன் இருக்கிறேன். இந்த சூழலில் என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கு யாராவது உதவுங்கள். ஆலோசனை கூறுங்கள்” என்று கூறியுள்ளார். அவரது வார்த்தைகள், இந்திய ஐடி துறையில் நிலவும் மனிதமற்ற மேலாண்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இந்த பதிவை பார்த்த பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஒருவர், ‛‛கவலையை விடுங்கள் ப்ரோ.. உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்” என்று கூறியுள்ளார். இன்னொருவரோ, ‛‛கேட்க வருத்தமாக இருக்கிறது. ஆனால் இதுபோன்று நடப்பது இப்போதெல்லாம் சாதாரணமானது தான். விரைவில் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.
இந்தியாவில் தனியார் துறையில் பணி பாதுகாப்பு சட்டம் இன்னும் போதுமானதாக இல்லை. ஐடி துறையில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானோர் “அடுத்த மின்னஞ்சல் என்னுடையதா?” என்ற பயத்துடன் வாழ்கிறார்கள். பணிநீக்கங்கள் பெரும்பாலும் “நிறுவன கொள்கை”, “பெர்பார்மன்ஸ் பிரச்சனை”, “விடுமுறை விதிமுறை மீறல்” போன்ற நிழல் காரணங்களின் கீழ் நடக்கின்றன.
தொழில்நுட்ப வளர்ச்சி மகிழ்ச்சியைத் தர வேண்டிய இடத்தில், மன அழுத்தம், நம்பிக்கை இழப்பு, வேலைபாதுகாப்பு பற்றிய பயம் என்பன ஆக்கிரமித்து வருகின்றன. எனவே, அரசு மற்றும் தொழில் சங்கங்கள் இணைந்து ஐடி துறைக்கென தனி வேலைவாய்ப்பு பாதுகாப்புச் சட்டம் கொண்டு வருவது காலத்தின் தேவை.



