மல்லை சத்யா, மதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ இடையேயான பனிப்போர் நீடித்து வந்த நிலையில் அண்மையில் மூத்த நிர்வாகிகள் தலையிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தனர். இருப்பினும் இருவருக்கிடையே முதல் போக்கு தெரிகிறது. இது பொதுச்செயலாளர் வரை மீண்டும் சென்ற நிலையில், கடந்த ஜூன் 29-ம் தேதி நடைபெற்ற மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில், மல்லை சத்யாவை வைகோ கடுமையாக விமர்சித்ததாகவும், அவரை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு துரோகம் செய்த மாத்தையாவுடன் ஒப்பிட்டுப் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக பூந்தமல்லியில் சமிபத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் மல்லை சத்யாவின் புகைப்படம் முற்றிலும் தவிர்க்கப்பட்டிருந்தது. மல்லை சத்யா குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ; மல்லை சத்யாவை என் உடன்பிறவாத தம்பியைப் போல நடத்தி வந்தேன். மதிமுகவுக்கு ஏற்கெனவே துரோகம் இழைத்து, கட்சியை பாழ்படுத்தலாம் என்று நினைத்து வெளியேறிய சிலரோடு நெருக்கமாக அவர் தொடர்பு வைத்துள்ளார். என்னைப் பற்றி சமூக வலைதளங்களில் மோசமான வகைகள் பதிவிடும் நபர்களுடனும் நெருக்கமாகப் பழகி வருகிறார் என்றார்.
மதிமுகவுக்கு ஆகாத சிலருடன் மல்லை சத்யா உறவில் இருப்பதாக வைகோ குற்றம்சாட்டியிருந்தார். கடந்த 4 ஆண்டுகளாக மல்லை சத்யா கட்சிக்கு உண்மையாக இல்லை எனவும் அவரது நடவடிக்கை சரியில்லை என்றும் திட்டவட்டமாக கூறினார். இந்நிலையில், கடும் அதிருப்தியில் உள்ள மல்லை சத்யா விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.