2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக – அதிமுக கூட்டணிகள் வேகமாக செயல்பட்டு வரும் தருணத்தில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு காவல்துறை சுற்றுப்பயண அனுமதி வழங்காதது புதிய அரசியல் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதற்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விஜய்க்கு திறந்த ஆதரவு தெரிவித்திருப்பது, “விஜய் கூட்டணி அரசுக்கு அடித்தளம் போடுகிறாரா?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
விஜய் தனது கட்சி தவெக சார்பில் வரும் 13ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் காவல்துறை அனுமதி வழங்க மறுக்கிறது என தவெக நிர்வாகிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதை விமர்சித்த திருமாவளவன், “ஜனநாயகத்தில் அனைவருக்கும் கருத்து சுதந்திரம், செயல் சுதந்திரம் உள்ளது. விஜயின் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி மறுத்திருப்பது ஏற்கக்கூடியது அல்ல. காரணம் என்ன என்பதை முதலில் அறிய விரும்புகிறேன்,” என்றார்.
இதன் போது, திருமாவளவன் அதிமுக-பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்தார்.“அதிமுக கூட்டணியில் இருந்தும் தனித்துவம் இழந்துள்ளது. பாஜக, அதிமுகவை கபளீகரம் செய்கிறது. எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட ஒருவரை, அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் சந்தித்து அரசியல் பேசுவது, அதிமுக தலைவரை எவ்வாறு மதிக்கிறார்கள் என்பதற்கு சான்று,” என அவர் கூறினார்.
மேலும், தனது கட்சியின் நிலை குறித்து திருமாவளவன் பேசுகையில் , “22,000க்கும் மேற்பட்டோர் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். அவை கணினிமயமாக்கப்பட்டுள்ளன. விரைவில் 234 தொகுதிகளிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். அதற்குப் பிறகே மாநிலத் தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்,” என தெரிவித்தார்.



