திருமணத்திற்கு முன் இருவரும் சம்மதத்துடன் உடலுறவு கொண்டு, உறவு முறிந்தபின்னர் “திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றினார்” என குற்றவியல் வழக்கு தொடர்வது ஏற்புடையதல்ல என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், தன்னுடன் பலமுறை உறவு வைத்துக்கொண்ட பின் திருமணம் செய்ய மறுத்ததாகக் கூறி ஒருவரை எதிர்த்து புகார் அளித்தார். இதன் பேரில் அந்த இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து அவர் மதுரை கிளை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில், நீதிபதி தனது தீர்ப்பில் முக்கியமாகக் குறிப்பிட்டார். “இன்றைய சமூகத்தில் தனிப்பட்ட உறவுகள் மாறிவரும் நிலையில், உணர்ச்சி ரீதியான தகராறுகளை தீர்க்க குற்றவியல் சட்டத்தை பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளது. இருவரும் சம்மதத்துடன் உறவில் ஈடுபட்டிருந்தால், பின்னர் ஏற்பட்ட பிரிவை காரணமாகக் கொண்டு குற்றவியல் வழக்குகள் தொடர்வது சட்டத்தின் நோக்கத்துக்கு புறம்பானது.
தனிப்பட்ட நடத்தையை ஒழுக்கப்படுத்தவோ, தனிப்பட்ட ஏமாற்றத்தை குற்றவியல் வழக்காக மாற்றவோ முடியாது. வற்புறுத்தல், ஏமாற்றம் அல்லது இயலாமையால் சம்மதம் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே சட்டம் தலையிடும்.” என்றார்.
மேலும் நீதிபதி, “பல ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வாழ்ந்தது இணைய உரையாடல்கள் மூலம் தெளிவாகியுள்ளது. எனவே இளைஞர் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது” எனவும் தெரிவித்தார். இந்த தீர்ப்பு, திருமண வாக்குறுதி ஏமாற்றம் என்ற பெயரில் தொடுக்கப்படும் வழக்குகள் அதிகரித்து வரும் தற்போதைய சூழலில், தனிப்பட்ட உறவுகள் மற்றும் சட்டத்தின் எல்லை குறித்து முக்கிய விளக்கத்தை வழங்கும் வகையில் பார்க்கப்படுகிறது.
Read more: 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை..!! முதல் நாடாக சட்டம் இயற்றியது ஆஸ்திரேலியா..!!



