மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற பாஜகவின் பயிற்சி முகாமில், கட்சி தலைவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த சிந்தூர் நிகழ்வைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச அரசு அமைச்சர் விஜய் ஷா, இந்திய ராணுவத்தில் பணியாற்றும் கர்னல் சோபியா குரேஷியை “பயங்கரவாதியின் சகோதரி” என குறிப்பிட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, பயிற்சி முகாமில் பங்கேற்ற அமித் ஷா, அரசியல் தலைவர்கள் எதையும் பேசும் போது பெரும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
“தவறுகள் நடக்கலாம். ஆனால் அது மீண்டும் நடக்கக் கூடாது. ஒருவர் எவ்வளவு அனுபவமுள்ளவராக இருந்தாலும், அவர் எப்போதும் ஒரு மாணவரைப் போலவே அடக்கம் மற்றும் விழிப்புடன் இருக்க வேண்டும்,” என அவர் தெரிவித்தார். மேலும், “சில நேரங்களில் பேசாமல் அமைதியாக இருப்பது தான் புத்திசாலித்தனம்” எனவும், சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு கருத்தையும் பாஜகவினர் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த கருத்துகள், கட்சி நிர்வாகத்திலுள்ள அனைத்து நிலை தலைவர்களுக்கும் ஒரு முக்கியச் செய்தியாக கருதப்படுகிறது. அரசியல் அடையாளத்தையும் கட்சி மதிப்பையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கையென்றே அமித் ஷாவின் இந்த எச்சரிக்கை பார்க்கப்படுகிறது.