சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை, தளபதி தெருவில் விஜய்(25) என்ற பொறியாளர் வாடகைக்கு வசித்து வந்தார். இவர் சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், தன்னுடன் பணிபுரிந்து வந்த சாப்ட்வேர் பொறியாளரான யுவஸ்ரீ (24) என்பவரை காதலித்து வந்தார். இருவரின் வீட்டிலும் காதலிப்பதை தெரிவித்து, கடந்த 13-ந் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு இந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்கள்.
நேற்று இரவு யுவஸ்ரீயின் தங்கை இவர்களது வீட்டுக்கு வந்தார். கதவு உள்புறமாக பூட்டி இருந்தது. நீண்டநேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த குன்றத்தூர் போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கட்டிலில் யுவஸ்ரீ இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
விஜய், தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இவர்களை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார், 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் விஜய், யுவஸ்ரீ முகத்தில் தலையணையால் அழுத்தி கொலை செய்துவிட்டு, பின்னர் தூக்கிட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த 9 நாட்களில் புதுமண தம்பதி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: நகைக்கடன் வாங்குவோருக்கு பேரதிர்ச்சி..!! கடன் தொகையை குறைக்க வங்கிகள் முடிவு..!!



