ஜெக்தீப் தன்கரின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ள நிலையில், அவர் உடல் நலம் பெற பிரதமர் பெற பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் நேற்று மாலை தனது பதவியை ராஜினாமா செய்தார்.. ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தில், சுகாதாரப் பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதற்காக உடனடியாக பதவி விலகுவதாக ஜெக்தீப் தன்கர் கூறியிருந்தார்.. அவரின் ராஜினாமா கடிதத்தில் “சுகாதாரப் பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்கவும், மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றவும், அரசியலமைப்பின் பிரிவு 67(a) இன் படி, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இந்திய துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
2027 வரை பதவிக்காலம் இருக்கும் நிலையில், முன்கூட்டியே தனது பதவியை அவர் ராஜினாமா செய்திருப்பது பல அரசியல் ஊகங்களை எழுப்பி உள்ளது.. ஜெக்தீப் தன்கர் அரசியல் அழுத்தம் காரணமாகவே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.. மேலும் இதுதொடர்பாக பல கேள்விகளையும் அவர்கள் எழுப்பி உள்ளனர்..
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அவர் ராஜினாமா செய்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பல ஊகங்களைத் தூண்டியுள்ளது, இருப்பினும் அவரது உடல்நிலை குறித்த கூடுதல் விவரங்கள் ராஜினாமா கடிதத்தில் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் குடியரசு துணை தலைவர் ஜெக்தீப் தன்கரின் ராஜினாமாவை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார். தன்கரின் ராஜினாமா கடிதத்தை ஏற்று முறைப்படி உள்துறை அமைச்சகத்திற்கு முர்மு அனுப்பி உள்ளார். இதன் மூலம் அவரின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தன்கர் உடல்நலம் பெற பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் உட்பட பல்வேறு பதவிகளில் நமது நாட்டிற்கு சேவை செய்ய ஸ்ரீ ஜகதீப் தன்கர் ஜிக்கு பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.