விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜனநாயகன். விஜய்யின் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜனநாயகன் படம் சென்சார் சான்று வழங்கப்படாததால் வெளியாகவில்லை.. ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் அரசியல் வசனங்கள் உள்ளதோடு, சில முக்கிய குறியீடுகள் உள்ளதாக குறிப்பிட்ட தணிக்கை வாரியம் படத்தின் வெளியீட்டுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்தது.
தொடர்ந்து ரிவைசிங் கமிட்டிக்கு பரிந்துரை செய்ததால் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. இது தொடர்பாக படக்குழு தொடர்ந்த வழக்கில் உடனடியாக யு/ஏ சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார். எனினும் இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல் முறையீடு செய்தது. இதனால் படம் வெளியாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது..
தயாரிப்பு நிறுவனம் தரப்பு இந்த தடையை நீக்க உச்சநீதிமன்றத்தை அணுகியது. ஆனால் இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனிடையே ஜனநாயகன் பட வழக்கில், உடனே தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.
அதன் பிறகு ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கோரும் விவகாரத்தில் மீண்டும் நீதிமன்றத்தை நாடும் முடிவை தயாரிப்பு நிறுவனம் கைவிட்டது.. தயாரிப்பு நிறுவனம், ஜனநாயகன் திரைப்படத்தை மறு தணிக்கைக்காக ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பியது. மறு தணிக்கை குழு திரைப்படத்தை பார்த்துள்ளதாக கூறப்படும் நிலையில் இன்னும் சென்சார் சான்று கிடைக்கவில்லை. இதனால் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. வெளியாகும் தேதியும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
இந்த சூழலில் தான், சமூக வலைதளங்களில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் சில முக்கிய காட்சிகள் லீக்காகி உள்ளது. சுமார் 5.31 நிமிடங்கள் வரையிலான காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வரும் நிலையில், படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


