ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 62.
ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் நேற்று காலமானார்.. கடந்த சில நாட்களாக டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார்.. ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “நீங்கள் இப்படிச் சென்றிருக்கக் கூடாது, இறுதி அஞ்சலி..” என்று பதிவிட்டுள்ளார்..
ஜார்க்கண்ட் ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வாரும் அமைச்சரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். “ஜார்க்கண்ட் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு அமைச்சர் ஸ்ரீ ராம்தாஸ் சோரனின் திடீர் மறைவுச் செய்தியைக் கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவரது மறைவு மாநிலத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரது துயரத்தில் வாடும் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் இந்த மகத்தான துக்கத்தைத் தாங்கும் வலிமையை கடவுள் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்,” என்று அவர் X இல் பதிவிட்டார்.
ஆகஸ்ட் 2 ஆம் தேதி தனது இல்லத்தில் குளியலறையில் விழுந்ததில் அமைச்சர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் ஜாம்ஷெட்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆகஸ்ட் 2 ஆம் தேதி டெல்லிக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்ட பிறகு ராம்தாஸ் சோரன் உயிர்காக்கும் சிகிச்சையில் இருந்தார். அவர் ஆபத்தான நிலையில் உள்ளார் என்றும் மூத்த நிபுணர்களைக் கொண்ட பல்துறை குழு தீவிர மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறது என்றும் கூறப்பட்டது..
ஜார்க்கண்ட் பாஜகவும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது. பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதுல் ஷாதியோ வெளியிட்டுள்ள அறிக்கையில்”…12 நாட்களில், ஜார்க்கண்டின் இரண்டு பெரிய தலைவர்கள் காலமானார்கள். ஜார்க்கண்டின் கோல்ஹான் பகுதியில் ராம்தாஸ் சோரன் முக்கிய பங்கு வகித்தார்.. ராம்தாஸ் சோரன் மிகப் பெரிய தலைவராக இருந்தார்… ஜார்க்கண்டில் சோக அலை வீசுகிறது…” என்று தெரிவித்துள்ளார்..