சைபர் குற்றவாளிகள் அரசு, போலீஸ் அல்லது விசாரணை அதிகாரிகள் என தங்களை போலியாக காட்டி, குறிப்பாக மூத்த குடிமக்களை “டிஜிட்டல் கைது” எனும் பெயரில் ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், இதுபோன்ற குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப் போவதாக உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை சுமார் ரூ.3,000 கோடி வரை மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளதாகவும், இது மிகக் கவலைக்கிடமான நிலை என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
டிஜிட்டல் கைது வழக்கில் நடவடிக்கை
நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, டிஜிட்டல் கைது மோசடி வழக்கில் தானாக முன் வழக்கு பதிவு செய்து விசாரிக்க தீர்மானித்தது. இதில் மூத்த வழக்கறிஞர் என். எஸ். நப்பினாயி அமிக்கஸ் க்யூரி (Amicus Curiae) ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிபதி சூர்யகாந்த் “நாட்டில் மட்டும் சுமார் ரூ.3,000 கோடி வரை மக்களிடமிருந்து பறிக்கப்பட்டது அதிர்ச்சியாக உள்ளது. இப்போது இதை கவனிக்காமல் விட்டால், எதிர்காலத்தில் இது பெரும் பிரச்சனையாக மாறும். இதனை கடுமையான நடவடிக்கையால் எதிர்கொள்ள நாங்கள் உறுதியாக உள்ளோம்.” என்று தெரிவித்தார்..
மூத்த குடிமக்கள் தான் முக்கிய இலக்குகள்
சாலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இந்த மோசடிகளின் மிகக் கவலைக்கிடமான அம்சம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் மூத்த குடிமக்கள்” என தெரிவித்தார். மேலும் உள்துறை அமைச்சகத்தில் இத்தகைய புகார்களை விசாரிக்கும் சிறப்பு பிரிவு ஏற்கனவே இருப்பதாகவும், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நேரம் கோரினார்.
தொழில்நுட்ப நிபுணர்கள் தேவை
“இது மிகப் பெரிய சவால். இது நமது நாட்டு மட்டுமல்ல, பிற நாடுகளிலும் என்ன நடக்கிறது என்பதையும் அறிய முடியவில்லை. நிதி மற்றும் தொழில்நுட்ப தளங்களில் வலிமையை அதிகரிக்க வேண்டும். இப்போது கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்காவிட்டால், பிரச்சனை மோசமடையும்.” என்று நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்தார்..
மேலும் “உள்துறை அமைச்சகத்தின் ரகசிய அறிக்கையின் அடிப்படையில் தங்கள் அலுவலகம் ஒரு சுருக்க அறிக்கையை தயாரித்துள்ளதாகவும், சில முக்கிய பரிந்துரைகள் அதில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கு நவம்பர் 10 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருவதாக நீதிமன்றம் அறிவித்தது.
CBI விசாரணைக்கு வாய்ப்பு
இதற்கு முன்பு அக்டோபர் 27 அன்று நடைபெற்ற விசாரணையில், நாட்டிலெங்கும் அதிகரித்து வரும் சைபர் மோசடி மற்றும் டிஜிட்டல் கைது வழக்குகளை விசாரிக்க சிபிஐக்கு (CBI) ஒப்படைக்கும் வாய்ப்பு உள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
“டிஜிட்டல் கைது வழக்குகளில் ஒற்றுமையான விசாரணை தேவை. குற்றவாளிகள் இந்தியா முழுவதும் அல்லது எல்லைக்கு அப்பால் இருந்து செயல்படக் கூடும்,” என நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் ஜோய்மால்யா பாக்சி தெரிவித்தனர். நீதிமன்றம் மேலும், மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களிடம் தங்களது பகுதிகளில் நடந்த டிஜிட்டல் மோசடிகள் குறித்து விவரங்கள் சமர்ப்பிக்க உத்தரவிட்டது.
எனவே டிஜிட்டல் மோசடி மற்றும் “டிஜிட்டல் கைது” வழக்குகள் நாட்டில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உச்சநீதிமன்றம் இதனை கடுமையாகக் கட்டுப்படுத்த தீர்மானித்துள்ளது.
Read More : ஓய்வூதியதார்களே அலர்ட்.. உடனடியாக இதை செய்யுங்கள்..! இல்லை எனில் ஓய்வூதியம் வராது..!



