இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல், தொடர்ந்து ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வருவது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், குறைந்தபட்ச டேட்டா மற்றும் கால் திட்டங்கள் ரூ.249 இலிருந்து ரூ.299 ஆக உயர்த்தப்பட்டன. இந்த உயர்வு வாடிக்கையாளர்களை பாதித்திருந்த நிலையில், ஆண்டு இறுதிக்குள் மீண்டும் கட்டண உயர்வு ஏற்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
10 முதல் 12 சதவீதம் வரை கட்டண உயர்வு செய்ய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டங்களின் விலை குறைந்தது ரூ.40 வரை கூடும் எனக் கூறப்படுகிறது.
கட்டண உயர்வுக்கு என்ன காரணம்?
- தொலைத்தொடர்பு துறையில் 5G சேவைகள் விரிவாக்கம்,
- அடிக்கடி நடைபெறும் பராமரிப்பு செலவுகள்,
- ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முதலீடு,
- பெரும் கடன் சுமைகள் ஆகியவற்றால், நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து கூடுதல் வருவாய் பெற முயற்சிக்கின்றன.
வாடிக்கையாளர்கள் மீது தாக்கம்: ஏற்கனவே அதிக கட்டணத்தால் சிரமப்படும் சாதாரண பயனாளர்கள், மீண்டும் கூடுதல் செலவினைச் சந்திக்க வேண்டிய நிலை உருவாகிறது. குறைந்த வருமானம் கொண்ட பயனாளர்கள், கட்டண உயர்வால் குறைந்த விலை திட்டங்களைத் தேட வேண்டிய சூழலில் தள்ளப்படுகிறார்கள். குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள பயனாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஜியோ, ஏர்டெல் ஆகியவை அதிகமான சந்தைப் பங்கைக் கொண்டுள்ளதால், அவற்றின் கட்டண உயர்வு நேரடியாக கோடிக்கணக்கான பயனாளர்களை பாதிக்கும்.
வோடஃபோன்-ஐடியா (Vi) நிறுவனமும் இத்திட்டத்தில் பங்கெடுத்து கட்டணங்களை உயர்த்த வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் ரீசார்ஜ் கட்டணங்கள், இந்தியாவில் டேட்டா பயன்பாட்டில் முன்னிலை வகிக்கும் பொதுமக்களிடம் பெரும் அதிருப்தியை கிளப்பி வருகிறது.
Read more: சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இந்த 5 பழங்களின் தோல்களை சாப்பிடவேண்டும்!. எவ்வளவு நன்மைகள் தெரியுமா?