இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறை பலரின் உடல்நலத்தை மெதுவாகக் குறைத்து வருகிறது. அதிகாலை முதல் இரவு வரை வீட்டு வேலைகள், அலுவலகப் பணி என நேரம் முழுவதும் வேலைச்சுமையிலேயே கடந்து செல்கிறது. அதற்குப் பிறகு கிடைக்கும் சிறிது நேரமும் தொலைபேசிகளில், சமூக வலைதளங்களில் மூழ்கியவாறே கழிகிறது. இதனால் உடல் இயக்கம் என்கிற பழக்கம் முற்றிலும் மறைந்து, பலர் தினமும் ஒரு சிறிய நடைபயிற்சி கூட செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு உடல் இயக்கமின்மை காரணமாக அதிக எடை, உடல் பருமன், இதய நோய், நீரிழிவு போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. உங்கள் வாழ்க்கை முறை எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும், குறைந்தபட்சம் சிறிது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
குறிப்பாக 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், தினமும் வெறும் 15 நிமிடங்கள் நடப்பதன் மூலம் பல உடல் நல நன்மைகளை பெற முடியும் என கூறப்படுகிறது. அதாவது, தினசரி நடைபயிற்சி உடலுக்கும் மனதுக்கும் இரட்டிப்பு நன்மைகளை அளிக்கக்கூடியது. என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.
செரிமான அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது: உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடப்பது உங்கள் செரிமான அமைப்புக்கு அற்புத பலன்களை அளிக்கிறது. நடப்பதால் வயிறு மற்றும் குடல் வழியாக உணவு சீராகச் செல்ல உதவுகிறது, இதனால் வீக்கம், சோர்வு, அசௌகரியம் போன்ற பிரச்சினைகள் குறையும்.
மேலும், நடைபயிற்சி குடல் நலனில் முக்கிய பங்கு வகிக்கும் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது செரிமான செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, உடலில் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சும் திறனை அதிகரிக்கிறது. நாட்களாக தொடர்ந்து இதைச் செய்தால் உங்கள் செரிமான அமைப்பு திறமையாகவும் ஆரோக்கியமாகவும் மாறும்.
மூளைக்கு புதிய ஆக்சிஜன் சப்ளை கிடைக்கிறது: நடைபயிற்சியின் போது இதய துடிப்பு சிறிது அதிகரிக்கும். இதனால் மூளைக்கு ஆக்சிஜன் நிறைந்த இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. அது கவனம், நினைவாற்றல், மற்றும் தீர்மான திறனை மேம்படுத்துகிறது. நிபுணர்கள் கூறுவதாவது, தினமும் 15 நிமிட நடைபயிற்சி மூளையில் உள்ள நரம்பு செயல்பாடுகளை சீராக்கி, மனஅழுத்தத்தை குறைக்கிறது. இது நினைவாற்றல் குறைவு மற்றும் மன நல பிரச்சினைகளைத் தடுக்கவும் உதவுகிறது. அதாவது, உடலை இயக்கும் அந்த சிறிய நடை உங்கள் மூளைக்கு புதிய சக்தியையும் தெளிவையும் வழங்குகிறது.
இரத்த சர்க்கரை அளவு சமநிலையில் இருக்கும்: உணவுக்குப் பிறகு 15 நிமிட நடைபயிற்சி செய்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் மிகப் பெரிய பங்காற்றுகிறது. நடப்பதால் உடல் தசைகள் குளுக்கோஸை உடனே உறிஞ்சத் தொடங்கும், இதனால் இரத்த சர்க்கரை திடீரென அதிகரிக்கும் அபாயம் குறையும்.
இதனை வழக்கமாகக் கடைப்பிடிப்பதால் இன்சுலின் எதிர்ப்பு உருவாகும் வாய்ப்பு குறைந்து, நீண்டகாலத்தில் நீரிழிவு நோயைத் தடுக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும். மேலும், நடைபயிற்சி உடல் வளர்சிதை மாற்றத்தையும் (metabolism) சமநிலைப்படுத்துகிறது. இதனால் உடல் சக்தி நிலை உயர்ந்து, நாள் முழுவதும் சோர்வின்றி செயல்பட முடிகிறது.
மூட்டுகள் வலுவடையும்: தினமும் சிறிது நேரம் நடப்பது மூட்டுகளுக்கு ஒரு இயற்கையான உடற்பயிற்சியாகும். இது எலும்புகள் மற்றும் தசைகளுக்கு இடையிலான இணைப்பை வலுப்படுத்துகிறது. இதனால் வயதானபோதும் மூட்டுகளில் கடினம் அல்லது வலி ஏற்படாமல் பாதுகாக்கலாம். குறிப்பாக மண்டை, கால் மூட்டுகள் போன்ற பகுதிகள் தொடர்ந்து இயக்கமடைவதால், அவற்றின் நெகிழ்வு தன்மை நீண்டகாலம் நிலைத்திருக்கும். நிபுணர்கள் கூறுவதுப்படி, தினமும் குறைந்தது 15 முதல் 30 நிமிடங்கள் வரை நடப்பது ஓஸ்டியோஆர்த்ரைடிஸ் போன்ற மூட்டுநோய்களின் அபாயத்தை குறைக்கிறது.
சருமம் இயற்கையாகப் பொலிவுடன் மாறும்: நடைபயிற்சி உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் சரும செல்களுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன. வியர்வை மூலமாக உடலிலிருந்து நச்சுப் பொருட்கள் வெளியேறுவதால், சருமம் தெளிவாகவும் ஆரோக்கியமாகவும் மாறுகிறது. இதுவே முகத்தில் இயற்கையான பளபளப்பை உருவாக்குகிறது. மேலும், நடைபயிற்சி கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதால், முகத்தில் ஏற்படும் மந்தமான தோற்றம் மற்றும் சிறிய கோடுகள் குறையும். இதனால் இயற்கையான இளமைத் தோற்றம் நீண்ட காலம் நீடிக்கும்.
நரம்பு மண்டலம் அமைதியாக இருக்கும்: நடைபயிற்சி மனஅழுத்தத்தை குறைக்கும் மிக எளிய வழிகளில் ஒன்றாகும். நம் உடலில் “ஹாப்பி ஹார்மோன்கள்” எனப்படும் செரோடோனின், எண்டார்பின் போன்ற நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் இதன் மூலம் அதிகரிக்கின்றன. இதனால் மனம் அமைதியாகவும், உடல் சோர்வின்றி புத்துணர்ச்சியுடனும் இருக்கும். காலப்போக்கில் இதன் விளைவாக தூக்கத்தின் தரம் மேம்படும். அதிகமான நிம்மதியுடன் உறங்கும் பழக்கம் மனநிலையையும் உடல் நலத்தையும் மேம்படுத்துகிறது.



