நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஒரிரு இடங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் நீலகிரி மாவட்டத்திர்கு ஒரிரு இடங்களில் நாளை மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டது. அதே போல் கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசியில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெயா வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கூடலூர் மற்றும் பந்தலூரில் மாநில பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 283 இடங்கள் அபாயகரமாக கண்டறியப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் அருகே யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.