கர்நாடக மாநிலத்தின் யாதகிரி மாவட்டம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சுகாதாரத் துறையில் பதிவு செய்யப்பட்ட 30,000-க்கும் மேற்பட்ட கர்ப்பங்களில், 3,000-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் பிரசவ விவரங்கள் காணாமல் போயிருப்பது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
2024-25 காலகட்டத்தில் மொத்தம் 31,435 கர்ப்பிணிப் பெண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதில் 26,584 குழந்தைகள் உயிருடன் பிறந்துள்ளன, 188 குழந்தைகள் இறந்துள்ளதாக பதிவாகியுள்ளது. மேலும் 1,329 கருக்கலைப்புகள், 207 நிலுவை வழக்குகள் என கணக்கிடப்பட்டுள்ள நிலையில், மொத்த எண்ணிக்கையில் 3,127 வழக்குகள் எங்கும் பதிவு செய்யப்படாமல் இருப்பது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த விவகாரம் முதன்முதலில் கன்னட பிரபா வெளியிட்ட சிறப்பு அறிக்கையின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. “7 மாதங்களில் 30 பெண் சிசுக்கொலைகள்” என்ற தகவல் வெளியானதையடுத்து, அரசு உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, மாநில சுகாதாரத் துறை உயரதிகாரி ஹர்ஷா குப்தா தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு, யாதகிரி மட்டுமின்றி மாநிலம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த அதிர்ச்சியான புள்ளிவிவரங்கள் வெளியானது. அதிகாரப்பூர்வமாக 652 கருக்கலைப்புகள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், காணாமல் போன ஆயிரக்கணக்கான வழக்குகள் ரகசிய கருக்கலைப்புகள் மற்றும் பெண் சிசுக்கொலைகளாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.
மேலும், இலக்குகளை பூர்த்தி செய்ய ‘போலி தாய் அட்டைகள்’ உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதனால், மருத்துவ அமைப்பின் நம்பகத்தன்மையே கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஹர்ஷல் போயர் கூறுகையில், “மாநில குழு ஆய்வு செய்து தகவல்களை சேகரித்துள்ளது. விரைவில் முழு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். போலி மருத்துவர்கள் மற்றும் சட்டவிரோத கருக்கலைப்புகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.



