கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் என பலர் பலியான இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறையினர் விதித்த நிபந்தனைகளை தவெக பின்பற்றவில்லை என்ற புகாரின் அடிப்படையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
மறுபக்கம், தவெக சார்பில் நீதிமன்றத்தை நாடும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த கோரிக்கை வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணியை நேரில் சந்திக்க தவெக வழக்கறிஞர் அணியினர் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து தவெக வழக்கறிஞர் அறிவழகன் கூறியதாவது:
“விஜய் மிகுந்த துயரத்தில் உள்ளார். காவல்துறை விதித்த நிபந்தனைகளை நாங்கள் மீறவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தவெக என்றும் துணை நிற்கும். அடுத்தகட்ட பிரசாரம் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.” என்றார்.
இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் தமிழக அரசின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளனர்.