கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
கரூருக்கு விஜய் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விரைவில் கருர் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கவிருக்கிறார் விஜய். அதேசமயம் இத்தனை நாட்கள் அவர் அங்கு செல்லாமல் இருப்பதும் விமர்சனத்தையும் சந்தித்திருக்கிறது.
பாஜக சார்பில் எம்பிக்கள் குழுவும் கரூருக்கு வந்து சென்றது. நிலைமை கை மீறி போவதை உணர்ந்த விஜய் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவும் ஷூட்டிங் மோடில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதுவரை விஜய் கரூருக்கு செல்லவில்லை. ஆனால் சில நாட்களுக்கு முன்பு அவர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேசி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இருப்பினும் அவர் நேரில் செல்லாததை அனைவருமே விமர்சிக்கிறார்கள். சமீபத்தில்தான் டிஜிபியிடம் கரூர் செல்வதற்கு அனுமதி கேட்டு தவெக சார்பில் மனு ஒன்றும் அளிக்கப்பட்டது. எனவே விரைவில் விஜய்யின் கரூர் விஜயத்தை எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில் கரூர் துயரம் தொடர்பான வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது. தீர்ப்பு வெளியான பின்னரே, விஜய்யின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள், பிரச்சாரம் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. முன்னதாக, இந்த விவகாரத்தில் நீதிமன்ற நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Readmore: கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை…! வானிலை மையம் எச்சரிக்கை…!