பொதுமக்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் நோக்கில் தபால் அலுவலகங்கள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதில் முக்கியமானதும், பெரும் வரவேற்பைப் பெற்றதுமான திட்டமாக கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra – KVP) விளங்குகிறது.
1988 ஆம் ஆண்டு சிறிய சேமிப்பு சான்றிதழ் திட்டமாக அறிமுகமான இந்தத் திட்டம், ஆரம்பத்தில் விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது, யார் வேண்டுமானாலும் இதில் முதலீடு செய்யலாம். கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், பொதுமக்களுக்கு பாதுகாப்பான சேமிப்பும், நிச்சயமான லாபமும் கிடைக்கும். மத்திய அரசின் ஆதரவு பெற்ற திட்டம் என்பதால், முதலீட்டாளர்கள் எந்த மோசடி அபாயத்திற்கும் ஆளாக வேண்டியதில்லை.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், ஆண்டுதோறும் வட்டி விகிதம் முதலீட்டில் சேர்க்கப்படும். தற்போது வழங்கப்படும் வட்டி விகிதம் 7.5 சதவீதம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் நீண்டகாலத்தில் இரட்டிப்பு வருமானம் பெறலாம். குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை என்பதால், விருப்பப்பட்ட அளவிற்கு முதலீடு செய்யலாம். சுமார் 10 ஆண்டுகளில் முதலீடு இரட்டிப்பு ஆகும் என்பது இந்தத் திட்டத்தின் சிறப்பு.
அரசு வழங்கும் இந்த திட்டத்தில், முதலீட்டை ஒருவர் பெயரிலிருந்து இன்னொருவருக்கு மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. பாஸ்புக் தொலைந்தால் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய பாஸ்புக் பெறலாம். அதேபோல் நாமினி மாற்றத்திற்கும் ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசின் முழு பாதுகாப்புடன் இயங்கும் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் நாடு முழுவதும் மக்கள் அதிக ஆர்வத்துடன் இணையத் தொடங்கி உள்ளனர். அருகிலுள்ள தபால் அலுவலகத்தில் எளிதாக கணக்கு திறந்து, சான்றிதழ் வடிவில் முதலீடு செய்யலாம்.