ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 மற்றும் 4ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராகுல் இடம்பெற்றிருந்தாலும் அவரிடம் இருந்து துணை கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக இருந்த கே.எல். ராகுல் கடந்த சில மாதங்களாக ஃபார்மை இழந்து தடுமாறி வருகிறார். இதையடுத்து ராகுலை டி20 போட்டிகளில் இருந்து நீக்கி தேர்வுக்குழு நடவடிக்கை மேற்கொண்டது. இன்னொரு பக்கம், சுப்மன் கில், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட இளம் வீரர்கள் எளிதாக ரன்களை குவித்து வந்தனர். இதனால் ராகுல் மீதான நெருக்கடி அதிகரித்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ராகுலுக்கு பதிலாக சுப்மன் கில் அல்லது சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் ராகுலுக்கு மட்டுமே அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. தன் மீதான விமர்சனங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் முதல் டெஸ்டில் 71 பந்துகளை சந்தித்த ராகுல் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். 2ஆவது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 17 ரன்னும், 2ஆவது இன்னிங்ஸில் 1 ரன்னும் எடுத்தார்.
இந்தநிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 மற்றும் 4ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ராகுல் இடம்பெற்றிருந்தாலும் அவரிடம் இருந்து துணை கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மோசமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வந்த நிலையில், இந்த நடவடிக்கையை தேர்வுக்கு எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் ஷர்மாவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டயாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, வெளியிடப்பட்டுள்ள இந்திய டெஸ்ட் அணியில், ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல், சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, கே.எஸ். பரத்(விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்) அஸ்வின், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், ரோகித் ஷர்மா(கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டயா(துணை கேப்டன்) இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்) ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர், அக்சர் பட்டேல், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மார்ச் 1ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.