திருமாலின் 108 திவ்யதேசங்களில் 48-வது தலமாக விளங்கும் திருப்பாடகம் பாண்டவதூத பெருமாள் கோயில், காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான வைணவ திருத்தலம். இங்கே, மகாபாரதக் கதையின் ஒரு முக்கியமான தருணமான ‘பாண்டவர்களின் தூதராக’ கண்ணன் தோன்றும் காட்சி, கோயிலின் முக்கிய தரிசனமாக இருக்கிறது.
இந்த கோயில் பல்லவர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் சோழர்கள், விஜயநகர மன்னர்கள் ஆகியோராலும் புதுப்பிப்பு மற்றும் விரிவாக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக குலோத்துங்க சோழன், ராஜ ராஜ சோழன் காலத்தில் கோயிலின் சுற்றுச்சுவர், இரண்டு புனிதக் குளங்கள் போன்றவை உருவாக்கப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
இக்கோயிலின் முக்கிய தனிச்சிறப்பு என்னவென்றால், கிருஷ்ணர் அமர்ந்த நிலையில், அதாவது அர்த்த பத்மாசனத்தில், வலது காலை மடக்கி வீற்றிருக்கிறார். அவர் இரண்டு திருக்கரங்களுடனே காட்சி தருகிறார். வலது கை அபயமுத்திரை, இடது கை வரதமுத்திரை. இது போன்ற அமர்ந்த நிலையில் இருக்கும் கிருஷ்ணர் சிலை மிகவும் அபூர்வமானது.
நான்கு நிலை ராஜகோபுரத்துடன், கிழக்கு நோக்கி உள்ள நுழைவுவாயிலைக் கொண்டது. மூலவர், பாண்டவதூத பெருமாள், சுமார் 25 அடி உயரம் கொண்டவர். தெற்குப் பக்கம் ருக்மணி தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. ஆழ்வார்கள், ராமானுஜர், உற்சவ மூர்த்திகள் அர்த்தமண்டபத்தில் தரிசிக்கலாம். சக்கரத்தாழ்வார் சன்னதியில், பின்னால் நரசிம்மர் உருவமும் காணப்படுகிறது. வடகிழக்கில் மத்ஸ்ய தீர்த்தம் உள்ளது.
Read more: செஸ் ஜாம்பவான் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய பிரக்ஞானந்தா.. ப்ரீஸ்டைல் செஸ் தொடரில் அசத்தல்..!!