ஹிமாச்சலப் பிரதேசத்தில் இடைவிடாத கனமழை பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையில், ஒரு நாய் குரைத்ததால் 67 பேர் உயிர் பிழைக்க உதவியது. எப்படி தெரியுமா?
ஹிமாச்சல் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் அம்மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.. அந்த வகையில் ஜூன் 30 ஆம் தேதி நள்ளிரவில் மண்டி மாவட்டத்தின் தரம்பூர் பகுதியில் அமைந்துள்ள சியாதி கிராமத்தில் ஒரு நாய் குரைத்ததால் 67 பேர் உயிர் பிழைத்தனர்.. அங்கு மழை பெய்தபோது, ஒரு வீட்டின் இரண்டாவது மாடியில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு நாய் வழக்கத்திற்கு மாறாக குரைத்து ஊளையிட தொடங்கியது. அதன் உரிமையாளர் நரேந்திரன் தூக்கத்தில் இருந்து எழுந்து பார்த்த போது, சுவரில் ஒரு பெரிய விரிசலையும் வீட்டிற்குள் தண்ணீர் பாய்வதையும் பார்த்துள்ளார்.
பிரபல ஆங்கில் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த நரேந்திரன் “ நாய் குரைக்கும் சத்ததால் நான் எழுந்தேன். நான் நாயிடம் சென்றபோது, வீட்டின் சுவரில் ஒரு பெரிய விரிசலைக் கண்டேன், தண்ணீர் உள்ளே வரத் தொடங்கியது. நான் நாயுடன் கீழே ஓடி அனைவரையும் எழுப்பினேன்,” என்று கூறினார்
அதன் பிறகு, நரேந்திரன் நாயுடன் கீழே இறங்கி அனைவரையும் எழுப்பினார். அவர்கள் மற்ற கிராம மக்களுக்கு எச்சரிக்கை செய்து, பாதுகாப்பான இடத்திற்கு ஓடச் சொன்னார்கள். ஆபத்தை உணர்ந்த மக்கள், எல்லாவற்றையும் விட்டுவிட்டு பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகுந்தனர்.
சில நிமிடங்களிலே அந்த கிராமத்தில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.. இதனால் பல வீடுகள் தரைமட்டமாக்கின. கிராமத்தில் நான்கு முதல் ஐந்து வீடுகள் மட்டுமே சேதமடையவில்லை.. மீதமிருந்த அனைத்து வீடுகளும் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளன.
ஒரு நாய் சரியான நேரத்தில் எச்சரிக்கை விடுத்ததால், 20 குடும்பங்களைச் சேர்ந்த 67 கிராமவாசிகளும் காயமின்றி தப்பினர்.
அருகிலுள்ள திரியம்பலா கிராமத்தில் உள்ள நைனா தேவி கோவிலில் உயிர் பிழைத்தவர்கள் தஞ்சம் புகுந்தனர். ஒரு வாரத்திற்கும் மேலாக அவர்கள் அங்கு வசித்து வருகின்றனர், பலர் இந்த பேரழிவுக்கு பிறகு உயர் இரத்த அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசாங்கம் உடனடி உதவியாக ரூ.10,000 வழங்கியுள்ளது.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் பருவமழை பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (SDMA) கூற்றுப்படி, ஜூன் 20 அன்று பருவமழை தொடங்கியதிலிருந்து குறைந்தது 78 பேர் இறந்துள்ளனர். இவற்றில், நிலச்சரிவு, மேக வெடிப்புகள் மற்றும் திடீர் வெள்ளம் போன்ற மழை தொடர்பான பேரழிவுகளில் 50 பேர் உயிரிழந்தனர், 28 பேர் சாலை விபத்துகளில் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : பச்சிளம் குழந்தையை கொதிக்கும் நீரில் போட்டு கொன்ற கொடூர தாய்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..