ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கு விடுபட்ட சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்ற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: கடந்த 2024-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் (நேர்காணல் இல்லாத பதவிகள்) அடங்கிய வேதியியலாளர், அருங்காட்சியக காப்பாட்சியர் (வேதியியல் பாதுகாப்பு), உதவி மேலாளர் (சேமிப்பு கிடங்கு), துணை மேலாளர் (தர நிர்ணயம்) உள்ளிட்ட பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்ப தகுதியுள்ள தேர்வர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.
அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது சிலசான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் முழுமையாகவும், சரியாகவும் பதிவேற்றம் செய்யப்படாமல், குறைபாடுடன் இருப்பது கண்டறியப்பட்டது. அவ்வாறு குறைபாடுடன் சான்றிதழ்கள் சமர்ப்பித்த தேர்வர்களின் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அத்தகைய தேர்வர்கள் விடுபட்ட மற்றும் முழுமையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை செப்.21-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தகவலும் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் தங்களின் ஒருமுறை ஓடிஆர் வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



