2023-24 நிதியாண்டில் இந்தியாவின் ஏழை, பணக்கார மாநிலங்கள் அடங்கிய பட்டியலை மக்களவையில் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், 2023-24 நிதியாண்டில் இந்தியாவில் அதிகபட்ச தனிநபர் நிகர மாநில உள்நாட்டு உற்பத்தியை (NSDP) கோவா மாநிலம், ரூ.3.57 லட்சமாகப் பதிவு செய்துள்ளதாக உறுதிப்படுத்தினார். அதே நேரத்தில் பீகார் ரூ.32,227 உடன் கடைசி இடத்தில் உள்ளது என்று தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட தற்காலிக தரவுகள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிரிதாரி யாதவ் மற்றும் தினேஷ் சந்திர யாதவ் ஆகியோரின் நாடாளுமன்ற கேள்விக்கு பதிலளித்த சவுத்ரி, 2024-25 ஆம் ஆண்டிற்கான தனிநபர் நிகர தேசிய வருமானம் ரூ.1,14,710 ஆக உள்ளது” என்றும் இது 2014-15 ஆம் ஆண்டில் ரூ.72,805 ஆக இருந்ததை விட குறிப்பிடத்தக்க உயர்வைக் குறிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், புள்ளிவிவரங்கள் வருமான வளர்ச்சியில் கடுமையான பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன. அதாவது அதிகபட்ச “தனிநபர் வருமானத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வேறுபாடு காணப்படுகிறது,” என்று அமைச்சர் மேலும் கூறினார், இந்த பொருளாதார வேறுபாடுகள் “மாறுபட்ட பொருளாதார வளர்ச்சி நிலைகள், துறைசார் அமைப்பு, கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நிர்வாக வழிமுறைகள்” ஆகியவற்றிலிருந்து உருவாகின்றன என்று குறிப்பிட்டார்.
தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் முதல் ஐந்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் (FY24): கோவா – ரூ.3,57,611,
சிக்கிம் – ரூ.2,92,339
டெல்லி – ரூ.2,71,490
சண்டிகர் – ரூ.2,56,912
புதுச்சேரி – ரூ.1,45,921
தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் கடைசி மூன்று மாநிலங்கள் (FY24): பீகார் – ரூ.32,227
உத்தரப்பிரதேசம் – ரூ.50,341
ஜார்க்கண்ட் – ரூ.65,062
கர்நாடகா (ரூ.1.91 லட்சம்),
தமிழ்நாடு (ரூ.1.79 லட்சம்),
தெலுங்கானா (ரூ.1.77 லட்சம்) போன்ற மாநிலங்கள் வலுவான பொருளாதார செயல்திறனைக் கண்டிருந்தாலும், கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களின் பெரும் பகுதிகள் தொடர்ந்து கணிசமாக பின்தங்கியுள்ளன என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இதுபோன்ற பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வது நீண்டகால உள்ளடக்கிய வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாக இருக்கும்” என்று புள்ளிவிவரங்களுக்கு பதிலளித்த ஒரு மூத்த பொருளாதார நிபுணர் கூறினார்.சப்கா சாத், சப்கா விகாஸ் என்ற வழிகாட்டும் தத்துவத்தின் கீழ் அரசாங்கம் “உள்ளடக்கிய வளர்ச்சிக்கு” உறுதிபூண்டுள்ளது என்று நிதி அமைச்சகம் அடிக்கோடிட்டுக் காட்டியது, இலக்கு வைக்கப்பட்ட பொருளாதார திட்டமிடல்கள் கொண்டுவரப்படலாம் என்றும் கூறப்படுகிறது.