லாக்அப் மரண வழக்கு விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றவர் அஜித்குமார். நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதே அஜித்குமாரின் மரணத்திற்கு காரணம் என்று குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்..
அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் கடுமையான வெளிப்புற காயங்களும், உட்புற ரத்தக்கசிவு ஆகியவை மரணத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
மணிக்காக கட்டிப்போட்டு அடித்ததால், அடி தாங்க முடியாமல் தான் திருடியதாகவும், நகையை கோயில் அருகே மாட்டுத் தொழுவத்தில் வைத்திருந்ததாகவும் அஜித் கூறியதாக அவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
அஜித்திற்கு கார் ஓட்ட தெரியாது என்றும், காரின் சாவி ஒரு மணி நேரம் இருந்த அடிப்படையில் போலீசார் அஜித் தான் திருடியதாக சந்தேகித்து போலீசார் தாக்குதல் நடத்தியதாக அவரின் சகோதரர் கூறியுள்ளார்.
இந்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இதனிடையே பிரேத பரிசோதனையில் இளைஞர் அஜித்குமாரின் உடலில் 18 இடங்களில் காயம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வலிப்பு காரணமாக அஜித்குமார் உயிரிழந்தார் என FIR பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மரணம் தொடர்பான வழக்கில் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. தனிப்படை காவலர்கள் 5 பேரையும் மதுரை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி வெங்கட பிரசாத் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 5 காவலர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே அஜித்குமாரின் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ள நிலையில் சிபிசிஐடி விசாரிக்க உள்ளது. சிபிசிஐ போலீசார் விரைவில் விசாரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் சிவகங்கை மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Read More : #Breaking.. அஜித்குமார் லாக்அப் மரண வழக்கு.. சிபிசிஐடிக்கு மாற்றம்..