புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆன்மிக அமைதியையும், பக்தி உணர்வையும் ஒருசேர வழங்கும் முக்கிய தலமாக விடோபா கோவில் விளங்கி வருகிறது. புதுக்கோட்டை நகரின் தெற்கு 4ஆம் வீதியில் அமைந்துள்ள இந்த ஆலயம், கிருஷ்ணர் மற்றும் ராதை சேர்ந்து காட்சியளிக்கும் சிறப்பால் பக்தர்களை ஈர்த்து வருகிறது. பசுமை சூழலில் அமைந்துள்ள இந்த கோவில், நகர வாழ்க்கையின் பரபரப்பிலிருந்து விலகி மனநிம்மதியை தரும் ஆன்மிக மையமாக பார்க்கப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்கும் இந்த ஆலயம், இந்துமத அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி பூஜைகள் முறையாக நடைபெறுவதுடன், பண்டிகை நாட்களில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக, கிருஷ்ண ஜெயந்தி விழா மிகுந்த சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் காலை முதல் இரவு வரை சிறப்பு பூஜைகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவதோடு, பல்வேறு பகுதிகளில் இருந்து குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடங்களில் வந்து வழிபடுவது கண்கொள்ளாக் காட்சியாக அமைகிறது.
இந்த கோவிலின் மற்றொரு முக்கிய அம்சம், கிருஷ்ணர் தங்கக் கவச அலங்காரத்தில் காட்சியளிப்பது. பக்தர்கள் இதனை காண அதிக அளவில் திரளுகின்றனர். மேலும், வேணுகோபாலர், கருடாழ்வார், தன்வந்திரி பகவான் போன்ற தெய்வங்களின் சன்னதிகளும் இங்கு அமைந்துள்ளன. துளசி மாடமும் பக்தி உணர்வை அதிகரிக்கும் வகையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அமைதியான சூழல், பசுமை நிறைந்த வளாகம், பக்தர்களுக்கு எளிதாக அணுகக்கூடிய அமைப்பு ஆகியவை இந்த ஆலயத்தின் சிறப்புகளாகும். பக்தர்கள் துளசி மாலை அணிவித்து கிருஷ்ணரை வழிபடுவது இங்கு பரவலாகக் காணப்படும் மரபாகும். ஆன்மிக நிம்மதியை நாடி வருபவர்களுக்கு, புதுக்கோட்டை விடோபா கோவில் ஒரு சிறந்த தலமாக திகழ்கிறது.
Read more: எச்சரிக்கை..! இந்த நோய்கள் சைலண்ட் கில்லர்..! ஒரு அறிகுறி கூட வெளியே தெரியாது…



