உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞர் ஆலோக் குப்தா (27), கடன் பிரச்சனை காரணமாக தனது சொந்த நண்பர்களாலேயே அடித்து படுகொலை செய்யப்பட்டு, மத்திய பிரதேச வனப்பகுதியில் வீசப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் தொழில்முறை புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்த ஆலோக் குப்தா, கடந்த ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் திடீரென மாயமானார். மகனைக் காணாமல் அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். ஆலோக் தங்கியிருந்த வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி 3 இளைஞர்கள் ஒரு பெரிய நீல நிற பையை தூக்கிக்கொண்டு வெளியேறிய பகீர் காட்சி பதிவாகி இருந்தது. அதே காலகட்டத்தில் மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்ட எல்லை வனப்பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கைப்பற்றப்பட்ட தகவல் பிரயாக்ராஜ் போலீசாருக்கு கிடைத்தது.
இரண்டு தகவல்களையும் ஒப்பிட்டு போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், ஆலோக்கின் நண்பர்களான சுபம் திவாரி, சுபம் யாதவ் மற்றும் அங்குஷ் யாதவ் ஆகியோர் இந்த கொலையை அரங்கேற்றியது அம்பலமானது. கைதான சுபம் திவாரி, ஆலோக்கிடம் இருந்து கடனாக பெற்ற பணத்தை திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், பணத்தை திருப்பிக் கொடுப்பதை தவிர்க்க சுபம் திவாரி தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆலோக்கை அடித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் உடலை 16 மணி நேரம் வீட்டிலேயே மறைத்து வைத்து, பெரிய நீல நிற பையில் அடைத்து காரில் எடுத்துச் சென்று ரேவா மாவட்ட பகுதியில் வீசிவிட்டு, அவரது விலை உயர்ந்த கேமரா மற்றும் ஐபோனையும் திருடிச் சென்றுள்ளனர்.
இந்த கொலை வழக்கில் மற்றொரு அதிர வைக்கும் தகவலும் வெளியாகி உள்ளது. ஆலோக்கை கொன்ற பின்னரும், அவர் உயிருடன் இருப்பது போல் காட்டிக்கொள்ள அவரது ஐபோனை பயன்படுத்திய சுபம் திவாரி, ஆலோக்கின் காதலி மற்றும் குடும்பத்தினருக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகளை (மெசேஜ்) அனுப்பி நாடகமாடியுள்ளார். சுமார் 20 நாட்களாக இந்த நாடகம் நீடித்த நிலையில், ஆலோக்கின் காதலி சந்தேகமடைந்து வீடியோ கால் மற்றும் போன் கால்கள் செய்தபோது சுபம் திவாரி எடுக்காமல் தவிர்த்துள்ளார். சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது 3 பேரையும் கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் இருந்து கார், கேமரா மற்றும் செல்போனை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : காதலியை பார்க்க வீட்டுக்கு வந்த காதலன்..! கொதிக்க கொதிக்க எண்ணெய்..! நள்ளிரவில் தாய் செய்த கொடூரம்..!



