எதிர்பார்ப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் இடையில் வெளியான ’தக் லைஃப்’ திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றியதற்காக இயக்குநர் மணிரத்னம் மன்னிப்பு கேட்டார் என செய்திகள் வெளியான நிலையில் தயாரிப்பாளர் சிவா ஆனந்த் மறுத்துள்ளார்.
’நாயகன்’ திரைப்படத்தில் இணைந்த மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணி 38 ஆண்டுகள் கழித்து இணைந்த திரைப்படம் ‘தக் லைஃப்’. கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. கமல்ஹாசனுடன் சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெட்சுமி, அசோக் செல்வன், அபிராமி, வடிவுக்கரசி, அலி ஃபைசல், சானியா மல்ஹோத்ரா எனப் பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தார். கமல்ஹாசன், மணிரத்னம் மற்றும் ரெட் ஜெயண்ட் ஆகியோர் இணைந்து தயாரித்தனர்.
1987ஆம் ஆண்டுக்குப் பிறகு கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணியில் இந்த படம் வந்ததால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், முதல் நாளில் இருந்தே ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது. 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் ’தக் லைஃப்’ திரைப்படம் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டுவதற்கு திணற வேண்டியதாக இருந்தது. அந்தளவிற்கு படம் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் ‘தக் லைஃப்’ படம் பார்த்து ஏமாந்த ரசிகர்களிடம் தான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று மணிரத்னம் கூறியதாக ஊடகங்களில் செய்தி பரவியது. இந்த சூழலில் ’தக் லைஃப்’ திரைப்பட விவகாரத்தில் மணிரத்னம் யாரிடமும் மன்னிப்புக் கேட்கவில்லை என்றும், அப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்பதால் அவர் மன்னிப்புக் கோரியதாக வரும் தகவல் தவறானது என்றும் இயக்குநரும் தக் லைப் பட தயாரிப்பாளர்களின் ஒருவருமான சிவா ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.