சீனாவின் குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியில், ஹோட்டல் அறையில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் தற்போது சர்வதேச அளவில் பேசப்படும் செய்தியாக மாறியுள்ளது. திருமணமான காதலனுடன் உடலுறவு கொண்ட பிறகு அவர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அந்தக் காதலி உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜூலை 14, 2024 அன்று பிங்னான் கவுண்டியில் 66 வயதான சோவ் என்ற நபர் தனது காதலி ஜுவாங் உடன் ஹோட்டலில் தங்கியிருந்தார். சோவ் பல ஆண்டுகளாக உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் போன்ற உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
அன்று இரவு இருவரும் உடலுறவு கொண்டதையடுத்து, காலையில் சோவ் எழுந்திருக்கவில்லை. அதனை அறிந்த ஜூவாங் உடனடியாக மருத்துவ உதவியை நாடாமல், தன் வீட்டிற்கு சென்று தன்னுடைய உயர் இரத்த அழுத்த மருந்துகளை எடுத்துக் கொண்டு சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஹோட்டலுக்கு திரும்பினார். ஹோட்டல் ஊழியர்கள் உதவியோடு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது சோவ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்தச் சம்பவத்துக்கு பின்னர் சோவின் மனைவியும் மகனும், ஜுவாங் மற்றும் ஹோட்டல் மீது வழக்கு தொடர்ந்தனர். அவர்கள், 550,000 யுவான் (சுமார் ரூ.66 லட்சம்) மற்றும் இறுதிச் சடங்கு செலவுகளுக்கான இழப்பீடு கோரிக்கை வைத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சோவின் மரணம் அவர் முன்னரே கொண்டிருந்த உடல்நலப் பிரச்சினைகளால் ஏற்பட்டதாகக் கூறியது.
இருப்பினும், உடனடி உதவியை நாடாமல் தாமதப்படுத்தியதற்கும், திருமணத்திற்கு புறம்பான உறவிலேயே சோவின் இறப்பு நிகழ்ந்ததற்கும், ஜுவாங் ஓரளவு பொறுப்பானவர் எனக் கருதப்பட்டது. இதனால், மொத்த கோரிக்கையின் 10 சதவீதமான 62,000 யுவான் (சுமார் ரூ.7.1 லட்சம்) தொகையை ஜுவாங், சோவின் குடும்பத்தாருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. சம்பவம் தனியார் அறையில் நடைபெற்றதால், ஹோட்டல் எந்த வித பொறுப்பும் ஏற்க வேண்டியதில்லை எனவும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.



