நாடு முழுவதும் காலியாக உள்ள 22,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) தற்போது வெளியிட்டுள்ளது.
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வரும் சூழலில், தற்போது நிலை 1-ன் கீழ் (Level 1) மொத்தம் 22,195 காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வேயில் மட்டும் 1,036 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், பொறியியல், டிராபிக் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத துறைகளில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதியைப் பொறுத்தவரை, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ (ITI) அல்லது தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு தகுதியாக ஏற்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்ந்தெடுக்கப்படும் ஊழியர்களுக்கு தொடக்க மாத ஊதியமாக ரூ.18,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்வு (CBT), உடற்தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். முதலில் நடைபெறும் 100 மதிப்பெண்களுக்கான கணினி வழித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடுத்தகட்டத் தேர்வுகளுக்குச் செல்ல மிக அவசியமாகும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் rrbchennai.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆகவும், பெண்கள், எஸ்சி/எஸ்டி, திருநங்கைகள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு ரூ.250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க மார்ச் 2-ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள மார்ச் 5 முதல் 14-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.



