கன்னியாகுமரியில் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரிக்கு இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் இஸ்லாமிய அமைப்பான குமரி டிரஸ்ட் என்ற அமைப்பின் சார்பில் இன்று ஒரு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி அவர்களை அழைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு மற்றொரு இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் இரு தரப்பினர் இடையே சில நாட்களாக வாக்குவாதங்கள் நடைப்பெற்று வந்துள்ளது. காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று குளச்சல் பெரிய பள்ளி வாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடையே குமரி டிரஸ்ட் அமைப்பு சார்பாக நிகழ்ச்சிக்கு வர கோரி நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை கண்ட மற்றொரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் மோதலாக மாறி இரு தரப்பை சேர்ந்தவர்களும் மாறி, மாறி தங்களுக்குள் சாலையில் வைத்து கடுமையாக தாக்கி கொண்டார்கள். இதில் இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகி பைரோஸ் ராஜா என்பவர் படுகாயம் அடைந்தார்.