வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாதிகளை இலக்காகக் கொண்டு அமெரிக்கா சக்திவாய்ந்த மற்றும் கொடிய தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று அறிவித்தார்.
டொனால்ட் ட்ரம்ப், நைஜீரியாவில் கிறிஸ்தவ சமூகத்துக்கு “உயிர்வாழ்தலுக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது” என கடந்த அக்டோபர் இறுதி முதல் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். நைஜீரியாவில் கிறிஸ்தவர்களை குறிவைத்து நடைபெறும் வன்முறைகளை அந்த நாட்டின் அரசு தடுக்க தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
இதனால், மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அமெரிக்கா இராணுவ தலையீடு செய்யக்கூடும் எனவும் அவர் மிரட்டினார். கிறிஸ்தவர்கள்மீது நடத்தப்பட்டதாக அவர் கூறும் கொடூரமான கொலைகளுக்கு பதிலடியாகவே, போர் மூலம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் என ட்ரம்ப் தெரிவித்தார்.
இதன் மூலம், நைஜீரியாவில் கிறிஸ்தவ சமுதாயத்தின் பாதுகாப்பை உறுதி செய்யாத அரசின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து, அமெரிக்கா நேரடியாக ராணுவ நடவடிக்கையில் ஈடுபடக்கூடும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
“இன்று இரவு, தலைமைத் தளபதி என்ற எனது உத்தரவின் பேரில், வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதக் கயவர்களுக்கு எதிராக அமெரிக்கா ஒரு சக்திவாய்ந்த மற்றும் கொடிய தாக்குதலை நடத்தியுள்ளது. அவர்கள் பல ஆண்டுகளாக, ஏன் பல நூற்றாண்டுகளாகக் கூட காணப்படாத அளவில், அப்பாவி கிறிஸ்தவர்களை இலக்காகக் கொண்டு கொடூரமாகக் கொன்று வருகின்றனர்!” என்று ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ளார்..
அமெரிக்க இராணுவத்தின் ஆப்பிரிக்கக் கட்டளைப் பிரிவு, நைஜீரிய அதிகாரிகளின் கோரிக்கையின் பேரிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் பல ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் கொல்லப்பட்டதாகவும் ‘எக்ஸ்’ தளத்தில் தெரிவித்துள்ளது.
தனது தலைமையின் கீழ் அமெரிக்கா “தீவிரவாத இஸ்லாமிய பயங்கரவாதம் செழிக்க அனுமதிக்காது” என்று அந்த குடியரசுக் கட்சித் தலைவர் அறிவித்தார். பயங்கரவாதிகள் உட்பட அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப் , “கிறிஸ்தவர்களை அவர்கள் படுகொலை செய்வதைத் தொடர்ந்தால், அவர்களில் இன்னும் பலர் கொல்லப்படுவார்கள்” என்று கூறினார்.
“கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்வதை நிறுத்தவில்லை என்றால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று நான் இதற்கு முன்பு அந்தப் பயங்கரவாதிகளுக்கு எச்சரித்திருந்தேன், இன்று இரவு அது நடந்தது. அமெரிக்காவால் மட்டுமே செய்யக்கூடிய வகையில், போர்த் துறை பல கச்சிதமான தாக்குதல்களை நடத்தியது. எனது தலைமையின் கீழ், நமது நாடு தீவிரவாத இஸ்லாமிய பயங்கரவாதம் செழிக்க அனுமதிக்காது.
கடவுள் நமது இராணுவத்தை ஆசீர்வதிக்கட்டும், மேலும் இறந்த பயங்கரவாதிகள் உட்பட அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். அவர்கள் கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்வதைத் தொடர்ந்தால், இன்னும் பலர் கொல்லப்படுவார்கள்,” என்று ட்ரம்ப் மேலும் கூறினார்.
நைஜீரிய அரசாங்கம், ஆயுதக் குழுக்கள் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இருவரையும் குறிவைப்பதாகவும், கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற ட்ரம்பின் கூற்றுகள் சிக்கலான பாதுகாப்புச் சூழ்நிலையைப் பிரதிபலிக்கவில்லை என்றும், மத சுதந்திரத்தைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சிகளை புறக்கணிக்கின்றன என்றும் கூறியுள்ளது. ஆனால், போராளிக் குழுக்களுக்கு எதிராகத் தனது படைகளை வலுப்படுத்த அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற அது ஒப்புக்கொண்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த நாட்டின் மக்கள்தொகை மத அடிப்படையில் இரண்டாகப் பிரிந்து வாழ்கிறது. வடக்கு பகுதிகளில் பெரும்பாலும் முஸ்லிம் மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். தெற்கு பகுதிகளில் பெரும்பாலும் கிறிஸ்தவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மத அடிப்படையிலான பிரிவு காரணமாக சமூக, அரசியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல பிரச்சினைகள் அங்கு உருவாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Read More : பயணிகளுக்கு ஷாக் நியூஸ்..! இன்று முதல் ரயில் டிக்கெட் விலை உயர்வு அமல்! எவ்வளவு தெரியுமா?



