இன்ஸ்டாகிராமில் காதலன் போல் பழகி மாணவிடம் இருந்து 60 சவரன் தங்க நகைகளை சக பள்ளி மாணவி அபகரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த ஜெராக்ஸ் கடை உரிமையாளர், வீட்டில் 60 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குடும்பத்தினரிடம் விசாரித்ததில் அவரின் 17 வயது மகள் நகையை எடுத்ததை ஒத்துக்கொண்டார்.
அந்த பெண் தந்தையிடம் கூறுகையில், ‘நான் பிளஸ்-2 படிக்கும்போது எனக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் என்னை காதலிப்பதாக கூறினார். ஆனால் அவரின் முகம் கூட எனக்கு தெரியாது. அவர் தாயாரின் மருத்துவ செலவுக்கு பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்தார். நான் பணம் இல்லை என்று எவ்வளவோ கூறியபோது, எனது நகைகளை தோழியிடம் கொடுத்து அனுப்புமாறு என்னிடம் கேட்டு கொண்டார்.
இதையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக எனது தோழி மூலம் அவருக்கு கொடுத்து அனுப்பினேன் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளி தோழியை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியிருக்கிறார்.
இந்த நிலையில் தோழியின் தந்தை, தனது மகளின் பீரோவில் 8 வளையல், 2 தங்க சங்கிலி என 15 பவுன் நகைகள் இருந்ததாக போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில், அந்த நகைகள் மாணவியின் மாயமான நகைகள் என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த பெண்ணிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது தோழி தான், திட்டமிட்டு மாணவியை ஏமாற்றியது அம்பலமானது.
இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி காதலன் போல் பேசி மாணவியிடம் நாடகமாடியதும் சக தோழிதான். போலீசார் விசாரணையில் தனது தாய் தான் இந்த திட்டம் போட்டுக்கொடுத்ததாக மாணவி தெரிவித்தார். போலீசார் தங்களை கைது செய்து விடுவார்களோ? என அஞ்சிய தோழி மற்றும் அவரது தாயார் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். உடனே அவர்களை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Read more: Flash: TNPSC குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு தேதி அறிவிப்பு..!