சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே, சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கஞ்சமலை சித்தர் கோவில். இயற்கை வளமிக்க மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்தக் கோவில், சித்தர்களின் புனித தலமாக கருதப்படுகிறது. சித்தர்கள் அதிகம் தங்கியிருந்த கஞ்சமலை பகுதியில் காலாங்கிநாதர் சித்தர் மிகவும் சிறப்பு பெற்றவர். திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் காலாங்கிநாதர் பற்றிய குறிப்பும் இடம்பெற்றுள்ளது.
இக்கோவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ளது எனக் கூறப்படுகிறது. ஆனால் இதை யார் கட்டினர் என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. கோவிலின் மிகப்பெரிய சிறப்புகளில் ஒன்று, ஏழு மூலிகை கிணறுகள். கஞ்சமலையின் அடியில் இருந்து வரும் நீர், பல்வேறு மூலிகை செடிகளின் சாரத்துடன் கலந்து வெளிவருவதால், இந்த நீரில் குளிப்பதால் தோல் நோய்கள், நீண்டநாள் வியாதிகள் குணமாகும் என நம்பப்படுகிறது.
இங்கு இருக்கும் காந்த தீர்த்தக் குளமும் மிகவும் பிரசித்தி பெற்றது. பக்தர்கள் தங்களின் தலையின் சுற்றிலும் உப்பு, மிளகாய், வெல்லத்தை சுற்றி போட்டால், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் நீங்கிவிடும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. மேலும், அகத்திய முனிவர் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் இந்தக் கோவிலுக்கு வருவதாக பக்தர்கள் கூறும் அனுபவங்களும் உண்டு.
இக்கோவிலில் வழிபடப்படும் சித்தேஸ்வர பெருமான் சாகா வரம் தருபவர் என்றும், திருமூலர் மற்றும் காலாங்கி சித்தர் மனிதனை இளமையாக்கும் மூலிகையை கண்டுபிடித்து தங்கள் வாழ்நாளை நீட்டித்தனர் என்றும் கூறப்படுகிறது. அந்த மூலிகையின் ஆற்றல் தான் இந்த கிணறுகளில் கலந்திருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
“அமாவாசை நாள்களில் இங்கு அதிகளவில் கூட்டம் காணப்படும். தோல் நோய் நீங்குவதற்காக மட்டுமல்ல, மன அமைதி மற்றும் ஆன்மிக பலம் பெறுவதற்காகவும் பக்தர்கள் திரண்டுவருகிறார்கள். பலமுறை வந்து அனுபவித்தோம்” என்று பக்தர்கள் பெருமையுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.
Read more: திருமண வரன் தேடுபவர்களே உஷார்.. ஒரே பெண்ணை பலருக்கு திருமணம் செய்து வைத்து மோசடி..!! பகீர் பின்னணி..