வங்கக் கடலில் உருவான ‘டித்வா’ புயல் (Ditwah Cyclone) மெதுவாக நகர்ந்து சென்னை அருகே கரையை கடக்கும் நிலையில், அதன் கடுமையான தாக்கம் இலங்கையில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40-ஐ கடந்துள்ளதாக இலங்கை அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கையின் தெற்கு பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, பின்னர் புயலாக வலுப்பெற்றது. இதற்கு ஏமன் நாடு பரிந்துரைத்த டித்வா என்ற பெயர் இடப்பட்டுள்ளது. தற்போது இந்த புயல் இலங்கை அருகே மையம் கொண்டிருப்பதால், அந்நாட்டின் பல பகுதிகளில் அதி கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
தேயிலை தோட்டங்கள் நிறைந்த பதுல்லா, நுவர எலியா உள்ளிட்ட மலைப் பகுதிகளில் தொடர்ச்சியான கனமழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் மட்டும் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 20-க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ள நீரில் சிக்கிய ஒரு பேருந்திலிருந்து 23 பயணிகள் போராடி மீட்கப்பட்டனர். பல பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இன்றும் 200 மி.மீ-க்கு மேல் மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், வெள்ள பாதிப்புகள் மேலும் தீவிரமடையலாம் என்ற கவலை எழுந்துள்ளது. இலங்கையில் இதுபோன்ற அதீத மழைப்பொழிவு அரிதான ஒன்றாக கருதப்படுகிறது. இதற்கு முன் 2003-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கனமழையால் 254 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



