பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக சுமார் 26 ஆயுதமேந்திய தாக்குதல்களுக்கு பொறுப்பான மாவோயிஸ்ட் தலைவர் மத்வி ஹித்மா, இன்று போலீசார் உடனான என்கவுண்டருக்கு பிறகு சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் அதிகம் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தலைவர் ஆவார்.. ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் உயர்மட்ட மாவோயிஸ்ட் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1981 ஆம் ஆண்டு சுக்மாவில் பிறந்த ஹித்மா, 1996 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை கெரில்லா இராணுவத்தின் ஒரு பட்டாலியனுக்கு தலைமை தாங்கினார். அதன் பிறகு, சிபிஐ மாவோயிஸ்ட்டின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான மத்திய குழுவின் இளைய உறுப்பினரானார் ஹித்மா.
சத்தீஸ்கரில் ஏப்ரல் 2021 இல் 22 பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்ட தாக்குதலில் மாவோயிஸ்ட் தலைவரும் முக்கிய சந்தேக நபராக இருந்தார். ஹித்மா குறித்த தகவல் தருவோருக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகை தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.. அவரது மனைவியும் என்கவுன்டரில் கொல்லப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..
இதனிடையே, மற்றொரு மோதலில், சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு மாவோயிஸ்ட் கொல்லப்பட்டார். காலை வேளையில் ஒரு காட்டு மலையில் பாதுகாப்புப் படையினர் மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோது துப்பாக்கிச் சண்டை தொடங்கியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (பஸ்தார் ரேஞ்ச்) சுந்தர்ராஜ் P பேசிய போது .“இதுவரை, ஒரு மாவோயிஸ்ட்டின் உடல் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது. நடவடிக்கை இன்னும் நடந்து வருகிறது, மேலும் அந்தப் பகுதி முழுமையாக சுத்திகரிக்கப்பட்டவுடன் கூடுதல் விவரங்கள் பகிரப்படும்” என்று தெரிவித்தார்..
Read More : தற்கொலைப் படை தாக்குதல் என்பது தியாகப் பணி; டெல்லி குண்டுவெடிப்பு குற்றவாளி உமர் பேசிய பகீர் வீடியோ..!



