16 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியைக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
மும்பை பள்ளியின் 40 வயதான பெண் ஆசிரியை, தனது 16 வயது மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்தற்காக கைது செய்யப்பட்டார். அந்தப் பெண், மைனர் சிறுவனை மும்பையில் உள்ள பல்வேறு ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் பிற இடங்களுக்கு அழைத்துச் சென்று, குடிக்க வைத்து, பதட்ட எதிர்ப்பு மாத்திரைகளையும் கொடுத்த பிறகு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஆசிரியை ஒரு வருடத்திற்கும் மேலாக மாணவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவரின் நடத்தையில் மாற்றத்தை குடும்பத்தினர் கவனிக்கத் தொடங்கிய பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அப்போதுதான் அந்த மாணவர் தனது குடும்பத்தினரிடம் ஆசிரியையின் துஷ்பிரயோகம் பற்றி கூறினார். மாணவன் பள்ளியிலிருந்து வெளியேறிவிட்டாதால், அந்த ஆசிரியை தங்கள் மகனை தொந்தரவு செய்ய மாட்டார் என்று நினைத்து குடும்பத்தினர் ஆரம்பத்தில் இந்த சம்பவம் குறித்து அமைதியாக இருந்தனர்.
ஆனால் அந்த ஆசிரியை, வீட்டு ஊழியர்கள் மூலம் மீண்டும் மாணவனை தொடர்பு கொள்ள முயன்றார், தன்னை சந்திக்கச் சொன்னார். அப்போதுதான் குடும்பத்தினர் முறையான புகார் அளிக்க முடிவு செய்தனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை ஜாமின் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் மாணவனின் சம்மதத்தோடு எங்கள் உறவு தொடர்ந்ததாக கூறியுள்ளார். மாணவன் தன்னை மனைவி என அழைத்ததாகவும், தனது பெயரை உடலில் பச்சை குத்தி கொண்டதாகவும் ஆதாரத்து நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், மாணவனிடம் இருந்து விலகி நிற்பதற்காக, ஏப்ரல் 2024ல் பள்ளி பணியை ராஜினாமா செய்தேன் என்றும், ஆனால், அதற்குப் பிறகும் மாணவனே தன்னை தொடர்ந்து தொடர்பு கொண்டார் என்று ஆசிரியை குறிப்பிட்டார். தொடர்ந்து தனக்கு 11 வயதில் இரட்டைக் குழந்தைகள் உள்ளதாகவும், அவர்களில் ஒருவருக்கு சுவாச கோளாறு இருப்பதையும், தனது சிறைவாசம் குழந்தைகளின் கல்வி மற்றும் மனநிலைக்கு பாதிப்பாக உள்ளது என வலியுறுத்தி ஜாமீன் கோரினார்.
மனுவை விசாரித்த நீதிபதி சபீனா மாலிக் கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்க உத்தரவிட்டார். அந்த உத்தரவில், பாதிக்கப்பட்ட மாணவனுடன் தொடர்பு கொள்ளக்கூடாது. மும்பையை விட்டு நீதிமன்ற அனுமதியின்றி வெளியேற கூடாது. எந்தவொரு நிபந்தனையும் மீறினால், ஜாமீன் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.